Advertisment

காவலர் கோரிக்கைகளை நிறைவேற்றுக: அன்புமணி வலியுறுத்தல்

ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட காவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anbumani Ramadoss. RK Nagar By-Poll, CBI, PMK, Anbumani Ramadoss,

ஊதிய உயர்வு, பணி உயர்வு உள்ளிட்ட காவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Advertisment

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாட்டு மக்களைக் காக்கும் உன்னத பணியில் இருந்தாலும், தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் வாழ்க்கை நிலை உன்னதமாக இல்லை. காவலர்களின் நியாயமான, செலவு பிடிக்காத கோரிக்கைகளைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழக அரசுப் பணியாளர்களில் சபிக்கப்பட்டவர்கள் என்றால் காவல்துறையினர் தான். நிர்ணயிக்கப்பட்ட பணி நேரம் எதுவும் இல்லாமல் அழைக்கப்படும் போதெல்லாம் ஓடி வந்து பணி செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஆட்சியாளர்களின் பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்டால் பல நேரங்களில் இரு நாட்களுக்கு, இயற்கை அழைப்புகளுக்குக் கூட இடம் கொடுக்காமல் சாலையோரங்களில் விழிப்புடன் இருந்து காவல் காக்க வேண்டும். குடும்பத்தினரை பல நேரங்களில் பார்க்க முடியாமல், குழந்தைகளுடன் விளையாட முடியாமல் பணிக்காக சொந்த வாழ்க்கையை தியாகம் செய்யும் அவர்களுக்கு உரிய அங்கீகாரமும், போதிய ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது தான் சோகமும், துரோகமும் ஆகும்.

பதவி உயர்விலும் அவர்களுக்கு நீதி வழங்கப்படுவதில்லை. இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேரும் பலர் தலைமைக்காவலராக ஓய்வுபெறும் அவலம் இப்போது நிலவுகிறது. சிறிதும் கண் துஞ்சாமல் இரவு & பகலாக பணியாற்றும் அவர்கள் பணி நேரத்திலோ அல்லது பணியின் போது ஏற்பட்ட உடல் மற்றும் மன ரீதியிலான பாதிப்புகள் காரணமாகவோ ஓய்வு பெறுவதற்கு முன்பாக உயிரிழந்தால், அதன்பிறகு அவர்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லி மாளாது. காவல்துறையில் பணியாற்றும் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முன்பெல்லாம் கருணை அடிப்படையில் உடனடியாக பணி வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இப்போது கருணையே இல்லாதவர்களின் ஆட்சியில் கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறிஞ்சி மலர் மலர்வது போன்று எப்போதோ நிகழும் அதிசயம் ஆகிவிட்டது. காவல்துறையினரின் குடும்பங்கள் மீது அரசுக்கு அக்கறை என்பதே இல்லை.

காவல்துறை செயல்பாட்டில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால், காவலர்களின் மனித உரிமை மதிக்கப்பட வேண்டும். அதற்கான முதல் நடவடிக்கையாக காவலர்களின் பணி நேரம் நிர்ணயிக்கப் பட வேண்டும். தவிர்க்க முடியாத சூழல்கள் தவிர மற்ற நேரங்களில் 8 மணி நேர பணி நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். காலநேரமின்றி காவலர்கள் பணியாற்றினாலும் அதற்கேற்ற ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. காவல்துறையிலும், தமிழக அரசின் பிற துறைகளிலும் பணியாற்றும் ஒரே கல்வித்தகுதி கொண்டவர்களுக்கு ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்படுவதில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடும்போது காவல்துறையில் மிகக்குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. இந்நிலையை மாற்றி, அனைத்துத் துறையினருக்கும் ஒரே கல்வித் தகுதி... ஒரே ஊதியம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அனைத்துப் படிகளையும் ஆய்வு செய்து நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு உயர்த்த வேண்டும்.

எப்போதுமே உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் இருந்தால் மட்டும் தான் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற உந்துதலாக இருக்கும். ஆனால், காவல்துறையினருக்கு அது இல்லை. காவல்துறையினரின் பணியை அங்கீகரிக்கும் வகையில் காவலர்களுக்கு 7 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். இரண்டாம் நிலைக் காவலராக பணியில் சேருபவர்கள் ஓய்வுபெறும் போது ஆய்வாளராக பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படவேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் காவலர்கள் நல அமைப்புகளை ஏற்படுத்துவதுடன், காவல்துறையினருக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்கும் கேண்டீன்கள் அனைத்து மாவட்டத் தலைநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். போர்ப்படையினருக்கு வழங்கப் படும் அனைத்து சலுகைகளையும் காவல்துறையினருக்கும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

காவல்துறையின் சாதனைகளுக்கு உயரதிகாரிகள் பெருமைத் தேடிக்கொள்ளும் நிலையில், அத்துறையின் தோல்விகளுக்கு மட்டும் காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு தண்டிக்கப் படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். காவலர்கள் பணிக்காலத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு இழப்பீடாக ரூ. 50 லட்சம் வழங்கப்பட வேண்டும். அத்துடன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவலர் குழந்தைகளின் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும். அவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதுடன், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்காக தொடங்கப்பட்டிருப்பதைப் போல காவல்துறையினரின் குழந்தைகள் படிப்பதற்காக தனியாக மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவமனைகளில் காவல்துறையினரின் குடும்பங்களுக்கு தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப் படுவதை உறுதி செய்ய வேண்டும். காவலர்களுக்கு ‘யோகா’ வகுப்புகளும் நடத்தப்பட வேண்டும்.

தமிழக மக்கள் தொகை ஏழரைக் கோடியாக உயர்ந்துள்ள நிலையில் காவலர்களின் எண்ணிக்கை 97,512 ஆக குறைந்துள்ளது. அதாவது 770 பேருக்கு ஒரு காவலர் மட்டுமே உள்ளார். இது போதுமானதல்ல. ஐக்கியநாடுகள் பரிந்துரைப்படி ஒரு லட்சம் மக்களுக்கு 222 காவலர்கள், அதாவது 450 பேருக்கு ஒரு காவலர் நியமிக்கப்பட வேண்டும். அதன்படி பார்த்தால் தமிழகக் காவல்துறைக்கு 1.67 லட்சம் காவலர்கள் தேவை. தமிழகத்தில் இப்போது 97,512 காவலர்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் 70 காவலர்களை தேர்வு செய்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். இவை குறித்த அறிவிப்புகளை காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதலமைச்சர் வெளியிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Pmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment