நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அந்த நிதியுதவியை வாங்க அனிதாவின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துவிட்டனர்.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய அரியலூர் மாணவி அனிதா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வின் காரணமாக, அதிக மனஉளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே அனிதா தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். அனிதாவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் ஆதங்கத்தை ஏற்படுத்தியது. மத்திய, மாநில அரசுகள் துரோகம் செய்துவிட்டதாகவே பொதுவாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
நீர் தேர்வால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என ஆரம்பம் முதலே எதிர்பு இருந்த நிலையில், அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிளஸ் 2 தேர்வில்1200-க்கு 1176 மதிப்பெண் பெற்றிருந்த அனிதா, மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனாலும், நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், மருத்தும் படிக்க வேண்டு என்பதில் தடை ஏற்பட்டது. நீட் தேர்வு என்றால் என்னவென்று தெரியாது என்று கூறியிருந்த மாணவி அனிதா, நீட் தேர்வில் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார். சனிக்கிழமை அனிதாவின் இறுதிச் சடங்கு நடந்தது.
அனிதாவின் தற்கொலையை அடுத்து, அவரது குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிதியுதவியும் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரியலூர் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபிரியா, அனிதாவின் வீட்டுக்குச் சென்று அரசு அளித்த ரூ.7 லட்சத்துக்கான காசோலையை அனிதாவின் குடும்பத்தினரிடம் அளித்தார். ஆனால், அந்த காசோலையை ஏற்க அனிதாவின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்து விட்டனர். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியும், அவரது சகோதரர் அந்த நிதியுதவியை பெற்றுக் கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இது அனிதாவின் சகோதரர் மணிரத்தினம் கூறும்போது: நீட் தேர்வால் எனது சகோதரிக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்கும் ஏற்படக் கூடாது. நீட் தேர்வில் அரசு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். அதன்பின்னர் இந்த நிதியுதவியை பெற்றுக் கொள்கிறோம் என்று கூறிவிட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.