மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மாணவர்கள் பத்தாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு எதிராக தன்னை எதிர் மனுதாரராக இணைத்துக் கொண்டு உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் மாணவி அனிதா, நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் விரக்தியடைந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்து, 196.5 கட்-ஆஃப் மதிப்பெண்ணும் பெற்ற அனிதா, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால், மன உளைச்சலில் இருந்த அனிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவரது உயிரிழப்பு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய - மாநில அரசுகள் தான் பொறுப்பு என எதிர்க்கட்சிகள் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
அனிதா தற்கொலை செய்து கொண்ட தினமே மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீட் தேர்வை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டும், முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஆறாவது நாளாக கல்லூரி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நியூ கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டி கொண்டு இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், சென்னையின் பல்வேறு இடங்கள், கோவை, திண்டுக்கல் என மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அரசு பள்ளி மாணவிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதற்கும் அஞ்சாமல் களத்தில் இறங்கி போராடிய இந்த பள்ளி மாணவிகளின் போராட்டம் நாடு முழுவதையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.