புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதையடுத்து, கடந்த 5-ம் தேதி சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இதன் தொடர்ச்சியாக மூன்றாவது கட்டமாக கடந்த 22-ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனிடையே, தமிழக அரசுடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற தமிழக முதல்வருடன் ஈரோட்டில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முதல்வர் அளித்த சில உறுதியை ஏற்று, போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அமைப்பின் சில பிரிவுகள் அறிவித்தன. ஆனால், அதற்கு பெரும்பாலானோர் ஆதரவளிக்கவில்லை. அதேசமயம், அந்த அமைப்பின் சில பிரிவுகள் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவித்தனர்.
இந்த நிலையில், ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று(சனி) நடந்தது. செப்டம்பர் 11-ம் தேதி (நாளை ) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்வதாக இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியன், மாயவன் கூறிய போது, "எங்கள் 3 கோரிக்கைகளோடு, மாணவர்களைப் பாதுகாக்கும் வகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற 4-வது கோரிக்கையையும் சேர்த்து 11-ம் தேதிமுதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அன்றைய தினம் ஆர்ப்பாட்டமும், 12-ம் தேதி மறியல் போராட்டமும் நடத்தப்படும்.
அதற்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், 13-ம் தேதிமுதல் கோரிக்கைகள் நிறைவேறும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் உயர்நிலை குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
28 ஆசிரியர் சங்கங்கள், 68 அரசு ஊழியர் சங்கங்கள், நீதித்துறை ஊழியர்கள் சங்கம், தலைமைச் செயலக சங்கம் ஆகியவை இதில் பங்கேற்கின்றன. இப்போராட்டத்தில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள். இது அவசரமாக வைக்கப்பட்ட கோரிக்கைகள் அல்ல. 13 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்துக்கும் தமிழக அரசுதான் பொறுப்பு" என்றனர்.
ஜாக்டோ - ஜியோவின் கணேசன் பிரிவு மறுப்பு:
இதற்கிடையில், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மற்றொரு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜெ.கணேசன் இந்தப் போராட்டத்திற்கு தங்களது பிரிவு ஆதரவு தெரிவிக்காது என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேட்டியளித்த போது, "அமைச்சர்களுடனான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்புக்குப் பிறகு, முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக நவம்பர் இறுதிக்குள் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாகவும், 7-வது ஊதியக்குழு தொடர்பாக செப்டம்பர் இறுதியிலும் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். ஈரோட்டில் கடந்த 6-ம் தேதி சந்தித்தபோதும் இதைத் தெரிவித்தார். இதை சரியாக புரிந்து கொள்ளாத சில அமைப்புகள், தனியாகப் பிரிந்துசென்று போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டம் நடத்துவது என்ற முடிவில் மாற்றம் இல்லை. தற்போது தள்ளிவைத்திருக்கிறோமே தவிர, கைவிடப்படவில்லை.
எனவே, செப்டம்பர் 11 முதல் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம், உண்மையான ஜாக்டோ - ஜியோவுக்கு பொருந்தாது. இதில் தலைமைச் செயலக சங்கம் பங்கேற்காது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் 12-ம் தேதி நடக்கவுள்ள கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்" என்றார்.