நீட் எதிர்ப்பு போராட்டம் காரணமாக சென்னை மெரினா கடற்கரையை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. கடற்கரை இணைப்பு சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நெடுவாசலில் மத்திய எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக வீரியமான போராட்டங்கள் நடந்தன. அதேபோல தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக 100 நாட்களைக் கடந்து போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.
மது ஒழிப்புக்காக பெண்கள் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மாநிலம் முழுவதும் போராட்டக் களம் அமைத்து வருகிறார்கள். அதேபோல ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினரும் தங்களின் ஊதியம் சார்ந்த பிரச்னைகளை முன்வைத்து போராட்டம் அறிவித்திருக்கிறார்கள்.
மெரினாவுக்கு வந்த இளைஞரை விசாரித்த போலீஸ்
இப்படி தொடர்ச்சியாக போராடுகிறவர்கள், சென்னை மெரினா கடற்கரையை தங்களின் போராட்டக் களமாக அமைத்துவிடக்கூடாது என்பதில் தமிழக போலீஸார் உஷாராக இருக்கிறார்கள். காரணம், கடந்த ஜனவரியில் சென்னை மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால்தான் இந்த உஷார் நடவடிக்கை!
ஆனால் இந்த உஷார் நடவடிக்கையையும் மீறி, இன்று (செப். 6) சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்தில் நீட் எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய இந்தப் போராட்டம், போலீஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து மெரினாவில் இன்று மாலையில் இருந்து கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மெரினாவில் நுழைகிற ஒவ்வொருவரையும் கடுமையான விசாரணைக்கு போலீஸார் உட்படுத்தினார்கள். எனவே மெரினாவுக்கு செல்ல நினைத்த சுற்றுலாப் பயணிகளும் சிதறி ஓடினார்கள். அதேபோல கடற்கரை சாலைக்கு இணையாக மெரினாவை ஒட்டி அமைந்துள்ள இணைப்பு சாலையில் இன்று போக்குவரத்தை போலீஸார் தடை செய்தனர். அங்கு எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.
அடுத்த சில நாட்களுக்கு மெரினாவை தீவிரமாக கண்காணிக்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். மாணவர்கள் அல்லது தமிழ் தேசிய அமைப்புகள் சார்பில் அங்கு ஏதாவது போராட்டம் உருவெடுத்து விடாதபடி தடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.