ஜெயலலிதா நினைவிடத்தில், நீட் எதிர்ப்பு மாணவர்கள் திடீர் போராட்டம் நடத்தினர். பலத்த பாதுகாப்பை மீறி அவர்கள் உள்ளே புகுந்ததால், போலீஸார் பதற்றம் அடைந்தனர்.
அரியலூர் மாணவி அனிதா மரணத்தை தொடர்ந்து, தமிழகத்தில் ‘நீட்’ எதிர்ப்பு போராட்டம் உக்கிரம் ஆகியிருக்கிறது. தமிழகம் முழுவதும் இடதுசாரி மாணவர் அமைப்பினரும், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகிறார்கள்.
இதற்கிடையே, ‘ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் போலவே நீட் எதிர்ப்புப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுக்க இருப்பதாக’ மாணவர்கள் கூறி வந்தனர். கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது, மெரினாவில் லட்சக்கணக்கானோர் குவிந்ததால், அந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் அரசுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. எனவே அதன்பிறகு எந்தப் போராட்டத்திற்கும் மெரினாவில் அனுமதி கொடுக்கப்படவில்லை.
கடந்த மே மாதம், ஈழத்தமிழர்களுக்காக மெரினாவில் தடையை மீறி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் நினைவுகூறத் தக்கது. தொடர்ந்து மெரினாவில் நான்கு பேருக்கு மேல் கூட்டாக சென்றாலும்கூட போலீஸார் அழைத்து விசாரிக்கும் சூழலே இருந்தது.
ஆனால் போலீஸாரின் இந்த கண்காணிப்பையும் மீறி போராட்டத்தை மெரினாவுக்கு எடுத்துச் செல்ல இடதுசாரி மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கம் முடிவெடுத்தது. அதன்படி இன்று (செப்டம்பர் 6) பிற்பகல் 2.15 மணிக்கு அந்த அமைப்பினர் சுற்றுலாப் பயணிகள் போல 4 அல்லது 5 பேர்களாக தனித்தனியாக மெரினாவில் கூடினர். அவர்களில் சிலர் அண்ணா நினைவிட வாசல் வழியாக உள்ளே சென்று, வலதுபுறமாக திரும்பி ஜெயலலிதா நினைவிடம் வந்து சேர்ந்தனர். வேறு சிலர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிட வாசல் வழியாகவே உள்ளே சென்றனர்.
அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸாரால் இவர்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 50 மாணவர்கள் ஜெயலலிதா நினைவிடம் அருகே கூடியதும், ‘நீட்’ தேர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அதன்பிறகே போலீஸார் சுதாரித்து அங்கே ஓடினர். போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர். ஆனால் மாணவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை.
சற்று நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், போலீஸார் திகைப்படைந்தனர். போராட்டக்காரர்களில் கணிசமானவர்கள் மாணவிகள் என்பதால், வலுக்கட்டாயமாக அவர்களை அப்புறப்படுத்துவதிலும் சிரமம் இருந்தது. ‘மோடி அரசே, மோடி அரசே, நீட் தேர்வை ரத்து செய், பதில் சொல்லு, பதில் சொல்லு, அனிதா படுகொலைக்கு பதில் சொல்லு’ என ஆக்ரோஷமாக அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டத்திற்கு இந்த இடத்தை தேர்வு செய்தது குறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘தனது இறுதி மூச்சு வரை நீட்டுக்கு எதிராகவும், மாநில உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவர் இறந்த பிறகுதான் நீட்டை திணிக்கும் துணிச்சல் மத்திய அரசுக்கு வந்தது. அதன் அடையாளமாகவே எங்கள் போராட்டத்தை இங்கே தொடங்குகிறோம்’ என்றார்கள். 'தியானம் நடத்த மாணவர்கள் அனுமதி கேட்டதாகவும், பிறகு திடீரென போராட்டத்தில் குதித்ததாகவும்’ போலீஸார் தெரிவித்தனர். பிறகு அவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் தூக்கிச் சென்றனர்.
இந்தப் போராட்டம் மெரினாவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.