சிஎஸ்கே வீரர்களுக்கு அசம்பாவிதம் நேர்ந்தால் நாங்கள் பொறுப்பல்ல! - வேல்முருகன் பகிரங்க எச்சரிக்கை!

என்ன துணிவிருந்தால் வீரர்கள் சென்னையில் வந்து இறங்கியிருப்பார்கள்?

சென்னையில் நாளை (ஏப்ரல் 10) நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், சென்னை வீரர்களுக்கு என்ன வேண்டும்னாலும் நடக்கலாம். அப்படி ஏதும் அசம்பாவிதம் நடந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சேப்பாக்கத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வேல்முருகன், “காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் உணர்வுப்பூர்வமாக போராட்டம் நடந்து வருகிறது. தமிழகமே போராட்டக்களமாக மாறி உள்ளது. நாங்கள் எவ்வளவோ கோரிக்கை விடுத்தும், என்ன துணிவிருந்தால் வீரர்கள் சென்னையில் வந்து இறங்கியிருப்பார்கள்? சென்னை அணி வீரர்கள் ஷாப்பிங் செல்லலாம், தியேட்டர்களுக்கு செல்லலாம் அல்லது ஹோட்டல்களுக்கு செல்லலாம். அப்படி அவர்கள் செல்லும் போது, என்ன வேண்டுமானாலும் அவர்களுக்கு நடக்கலாம். லட்சக்கணக்கான தமிழக இளைஞர்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். அப்படி, வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதற்கு நானோ எனது கட்சியோ பொறுப்பாக முடியாது.

இந்தப் பேட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் தெரிந்த சென்னை அணி வீரர்கள், தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் போட்டிகள் முடிந்துவிடும். ஆனால், நீங்கள் இங்கு தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

ஐபிஎல் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் நடக்கும் ஊழல்களை நாங்கள் தோலுரிப்போம். எங்கள் இளைஞர்கள் இனி கிரிக்கெட்டே பார்க்க விரும்பாத அளவிற்கு, அதில் நடக்கும் ஊழல்களை வெளிக் கொண்டு வருவோம்” என்றார்.

×Close
×Close