தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டு வந்தது.
சுமார் 70 நாட்களுக்கும் மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் என தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
முன்னதாக, மருத்துவமனையில் முகாமிட்டிருந்த அதிமுக செய்தித் தொடர்பாளர்கள், மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் என அனைவரும் ஜெயலலிதா நன்றாக இருக்கிறார் எனவும், அவர் இட்லி சாப்பிடுகிறார் எனவும், அங்குள்ள செவிலியர்களிடம் சகஜமாக பேசுகிறார் எனவும், கூறி வந்த நிலையில், அவரது மறைவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
சுமார் 10 மாதங்கள் ஆகியும் இன்னும் அவரது மரணம் குறித்த சந்தேகங்களும், சர்ச்சைகளும் தீர்ந்தபாடில்லை.
இந்தச் சூழலில், 'ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, அவர் இட்லி சாப்பிட்டார் என கூறியது பொய். சசிகலாவுக்கு பயந்தே நாங்கள் அவ்வாறு பொய் சொன்னோம் எங்களை மன்னித்து விடுங்கள்' என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். திண்டுக்கல் சீனிவாசனின் கருத்தை தொடர்ந்து அமைச்சர்கள் சிலரும் இதே கருத்தை தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
ஆனால், 'மருத்துவமனையில் நான் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஜெயலலிதாவைப் பார்த்தோம்' என செல்லூர் ராஜு தெரிவித்தார். அமைச்சர் நிலோஃபர் கபிலும் இதே போன்று தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவை சகாக்களே முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருவது எடப்பாடியாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்று டெல்லியில் பேட்டியளித்த அப்போலோ தலைவர் பிரதாப் சி ரெட்டி, "மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தரமான சிகிச்சை அளித்தோம். எங்களால் எந்தளவிற்கு சிறப்பாக சிகிச்சை அளிக்க முடியுமோ அந்தளவிற்கு சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதா விவகாரத்தில் நாங்கள் எதையும் மறைக்கவில்லை" என்றார்.
ஆனால், 'அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தார்களா?' என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு அவர் பதில் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
தொடர்ந்து பேட்டியளித்த அப்போலோ மருத்துவமனைகளின் நிர்வாக தலைவர் ஹரிபிரசாத், "தமிழக அரசு நியமித்துள்ள விசாரணைக் கமிஷனை வரவேற்கிறோம். விசாரணையின் போது நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம்" என்றார்.