தமிழக அரசு நியமித்த, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் கமிஷனை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் விஜயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ந் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந் தேதி மரணம் அடைந்தார்.
அவர் மரணம் அடைந்து 10 மாதங்கள் ஆகியும், இன்னும் அவரது மரணத்திற்கான காரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே இருக்கின்றன.
அவரது மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் முதன் முதலாக கோரிக்கை வைத்தார். அதன்பின், 'ஜெயலலிதா மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்' என முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
பின்னர் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். கூட்டணி இணைந்த போது, 'ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும்' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி, "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது" என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கான கால அவகாசம் 3 மாதங்கள் ஆகும். 2016 செப்டம்பர் 22-ம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழல், அவரது அப்போதைய நிலைமை, அதன்பிறகு டிசம்பர் 5-ம் தேதி வரை அப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை ஆகியவை குறித்து இந்த ஆணையம் விசாரிக்கும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, கடந்த செப்., 30-ஆம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் டிவிசன் பெஞ்ச் முன்பு மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயன் ஆஜராகி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் தலைமையில், சிபிஐ உள்ளிட்ட உயர் விசாரணை அமைப்புகள் கொண்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, விசாரணை ஆணையம் அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. ஏனெனில், விசாரணை ஆணையச் சட்டத்தின் படி, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிதான், ஆணையம் அமைக்க உத்தரவிட முடியும். ஆனால், இந்த ஆணையம் அமைக்க, அவ்வாறு எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், தாங்கள் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க தேவையில்லை என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
ஆகவே, இதுதொடர்பாக, வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். இதை ஏற்றுக் கொண்ட முதல் டிவிசன் பெஞ்ச், மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்ததுடன், இந்த வழக்கை நாளை (4.10.17) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தது.