சாரணர்-சாரணியர் அமைப்புக்கு ஹெச்.ராஜாவை தலைவராக்குவது நாசகார செயல் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களான தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:
தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே செயல் பட்டு வரும் சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும், தமிழர் விரோத போக்கை தொடர்ந்து கடைப்பிடித்து வருபவருமான ஹெச்.ராஜாவை தலைவராக்க தமிழக முதல்வர் எடப்பாடியாரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக கல்வித்துறை அதிகாரிகள் மறைமுகமாக மிரட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கினறன.

தமிழகம் சமூக நல்லிணக்கம்,சமூக நீதி ஆகியவற்றின் தாயகமாக திகழ்ந்து வருகிறது.அதுவும் படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு மத்தியில் சமத்துவ-சகோதரத்துவ எண்ணங்கள் அதிகமாக மேலோங்கியிருக்கும் மாநிலமாகவும் திகழ்கிறது. அப்படிப்பட்ட நல்லிணக்க உணர்வுகள் நிறைந்திருக்கும் தமிழகத்தில்,சாரண-சாரணியர் அமைப்புக்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை தலைவராக்க தமிழக அரசு முயற்சி செய்வது அதிர்ச்சியளிக்கிறது.
பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் நாசகார செயலில் ஈடுபடுவது கடும் வேதனையளிக்கிறது.இதை ஏற்கவே முடியாது.வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போன்ற பொறுப்புகளுக்கு சகிப்புத்தன்மையும்,பன்முக கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் பரந்தமனமும்,தூரநோக்கு பார்வையும் கொண்ட பொதுவான ஒரு நபரையே கொண்டு வித வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இப்பொறுப்புக்கு ஹெச்.ராஜாவை கொண்டு வரும் முயற்சியை கைவிட்டு,பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர்., சமூக நீதிக் காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா ஆகியோரின் வழியில் முடிவுகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசையும், முதல்வர் எடப்படியாரையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு கூறியுள்ளனர்.