ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட போது இருந்த பரபரப்பை விட, அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி வெளிவரும் ஒவ்வொரு செய்திகளும் அதிக பரபரப்பை பெறுகின்றன. சமீபத்தில் ஜெயலலிதா உடல் நிலை பற்றி பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று பொய் சொன்னோம். எல்லோரும் எங்களை மன்னித்து விடுங்கள்’ என்று தெரிவித்தார்.
அதன் பிறகு, அம்ருதா என்ற பெண், 'நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். ஜெயலலிதா உடலை தோண்டி டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என பரபரப்பை கிளப்ப, நம்ம மீடியாக்கள் பெங்களூரு நோக்கி படையெடுக்க, அங்கே ஜெயலலிதாவின் உறவினர்கள் சிலர், 'ஆம்! ஜெயலலிதாவிற்கு குழந்தை பிறந்தது உண்மை தான்' என்று சொல்ல, சூடு பிடிக்கத் தொடங்கியது இவ்விவகாரம்.
இப்போது, மற்றொமொரு மிகப்பெரும் பரபரப்பை, வருங்காலத்தில் புயலாக கூட மாற வாய்ப்பிருக்கும் தகவல் எனும் உண்மையை இன்று வெளிக்கொணர்ந்துள்ளார் அப்போலோ தலைவர் பிரதாப் சி ரெட்டி.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதாப், "ஜெயலலிதாவை ஆபத்தான நிலையில் தான் அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அன்று வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் நடைபெற்று வருவதால் அதுபற்றி மேலும் பேச முடியாது" என்று கூறி ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம அவிழ்ச்சுகளில் ஒன்றை லைட்டாக லூஸ் செய்துள்ளார்.
மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அதாவது செப்டம்பர் 23 - ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு, “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவால் ஏற்பட்ட உடல்சோர்வுக்கு சிகிச்சை பெற அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்” என்று அதிகாரப்பூர்வமாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இன்று, மக்கள் அச்சப்படக் கூடாது என்பதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டும், ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல் என பொய் சொன்னதாக அப்போலோ தலைவர் பிரதாப் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆனால், இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டியுள்ளது. கடந்த ஜூலை 18-ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாப் சி ரெட்டி, ''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தத் தவறும் இல்லை. அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது யாரும் தலையிடவில்லை. மருத்துவக் குழு அமைக்கப்பட்டதில் மட்டும் ஜெயலலிதா குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அவருக்கு மிகவும் வெளிப்படையாகவே சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதுதொடர்பான எல்லா மருத்துவ ஆவணங்களும் தயாராக உள்ளன. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தினால் எதிர்கொள்ளத் தயார்'' என்றார்.
'ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது யாரும் தலையிடவில்லை' என அன்று கூறிய பிரதாப், 'ஜெயலலிதாவுக்கு சாதாரண காய்ச்சல் தான் என ஏன் கூற வேண்டும்?' யாருடைய தலையீடும் இல்லாமல், எப்படி அவராகவே இதை சொல்ல முடியும்?.
அப்படியே, விரைவில் குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவர் கூறியதாகவே வைத்துக் கொண்டாலும், 75 நாட்கள் ஏன் ஜெயலலிதாவை மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டும்? கேள்விகள் எழாமல் இல்லை.