அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், வெளியிட்ட அறிக்கையில், எஸ்.பி. வேலுமணி மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு நடைபெற்றது என்று தெரிவித்திருந்தார். இதற்கு அறப்போர் இயக்கத்தினர் வானதி சீனிவாசன் இப்படி இப்படி ஊழலை அப்பட்டமாக ஆதரிக்கலாமா என்று கேள்வி எழுப்பினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மாநகராட்சி பணிகள் ஒப்பந்தத்தில் முறைகேடு செய்ததாக அவருடைய வீடு மற்றும் அவர் தொடர்புடைய 53 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஆகஸ்ட் 10ம் தேதி அதிரடி சோதனை நடத்தினார்கள். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருப்பது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக தரப்பில் விமர்சிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணிக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விமர்சித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டார். அதில், வானதி சீனிவாசன் கூறியிருப்பதவது: “தமிழகத்தில் கடந்த அதிமுக அரசாங்கத்தில் அந்த ஆட்சியை காப்பாற்றுகின்ற மிகப்பெரிய பொறுப்பினையும் அதே சமயம் கொங்கு மண்டலப் பகுதிக்கு மிக அதிகமான திட்டங்களைக் கொண்டுவருவதற்காக பல்வேறு திட்டங்களில் முன்னெடுப்பும் செய்திருக்கின்ற எஸ்.பி. வேலுமணி மீது மிகுந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக செயல்பட்டு வந்தது.
குறிப்பாக திமுக தலைவரும் இன்றைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், எஸ்.பி. வேலுமணி மீது தனிப்பட்ட முறையிலேயே மிகுந்த காழ்ப்புணர்ச்சி கொண்டிருந்தார்.
தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதலில் எஸ்.பி. வேலுமணியின் அரசியல் வாழ்க்கையை முடிப்போம் என்கின்ற மாதிரியான பல்வேறு விஷயங்களை மக்கள் முன்பாக பிரசாரத்தின்போது பேசி வந்தார்கள்.
அதற்குப் பின்பாக தேர்தலில் இந்த கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதிகூட திமுக பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதற்கு எஸ்.பி. வேலுமணிதான் மிக முக்கிய காரணம் என திமுகவின் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர் மீது கொண்டிருந்த வன்மத்தின் காரணமாக அவர் மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.
தேர்தலில் வருகின்ற வெற்றி தோல்விகளை என்றுமே நிரந்தரமாக்க முடியாது. இதை வைத்துக்கொண்டு அரசியல் எதிரிகளை பழி வாங்குகின்ற இந்த நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
வருகின்ற உள்ளாட்சி தேர்தலில், கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் அந்த வெற்றிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பவர் எஸ்.பி.வேலுமணி என்கின்ற காரணத்தினால், அவரை மனரீதியான உறுதியைக் குலைப்பதற்காகவும் அவருக்கு தொடர்பு உடைய இருக்கிறவர்களின் இடங்களை எல்லாம் சோதனை செய்ததின் வாயிலாக அவருடைய சுற்றுவட்டாரத்தை அச்சுறுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக நாங்கள் நம்புகிறோம்.
இம்மாதிரி அரசியல் எதிரிகளை பழிவாங்கும் இந்த நடவடிக்கையை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
வானதி சீனிவாசன், “எஸ்.பி வேலுமணி மீது ஒரு புகார் ஒன்று ஒருவரால் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு அவருடைய வீட்டில் ரெய்டு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கை என்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு வரக்கூடிய நடவடிக்கையாகும்.” என்று குறிப்பிட்டுள்ளதற்கு எஸ்.பி.வேலுமணி மீது புகார் அளித்து வழக்கு தொடர்ந்த அறப்போ இயக்கத்தினர் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளனர்.
வானதி சீனிவாசனின் அறிக்கைக்கு எதிர்வினையாக அறப்போர் இயக்கம் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு ஆதரவாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ கொடுத்துள்ள அறிக்கை ஊழலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் 2018ம் வருடம் DVACல் புகார் கொடுத்து பிறகு, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்து தற்பொழுது ரெய்டு நடத்தப்பட்டு வேலுமணி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது FIR பதியப்பட்டுள்ளது.
ஆனால், வானதி சீனிவாசன் யாரோ ஏற்பாடு செய்து யாரோ புகார் கொடுத்ததாக அறிக்கை கொடுத்து இருக்கிறார். அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் இந்த FIR போடப்பட்டுள்ளது என்று அனைத்து செய்திகளிலும் வந்த பிறகும் இவர் யாரை திருப்திப்படுத்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்?
முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றமே சொன்ன பிறகு வானதி சீனிவாசன் எந்த அடிப்படையில் இந்த புகாரை கொச்சைபடுத்தி பேசுகிறார்? இது தான் பிரதமர் மோடி உங்களுக்கு சொல்லிக்கொடுத்த ஊழல் ஒழிப்பா?
அப்படி இந்த வழக்கின் அடிப்படை ஆதாரங்கள் பொய் என்று உங்களுக்கு தெரிந்தால் வாங்களேன் இது குறித்து ஒரு விவாதம் செய்யலாம். நாங்க ரெடி நீங்க ரெடியா வானதி சீனிவாசன்?” என்று விவாதத்துக்கு அழைத்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலிசார் நடத்திய சோதனையைக் கண்டித்து பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அறிக்கை வெளியிட்டதற்கு அறப்போர் இயக்கத்தின எதிர்வினையாற்றியிருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இது குறித்து அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் உடன் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸில் இருந்து தொடர்பு கொண்டு பேசினோம்.
ஜெயராம் வெங்கடேசன் கூறியதாவது: “இவர்களுக்குள் அரசியல் ரீதியாக பேசுவார்கள் என்பதெல்லாம் வேறு. ஆனால், இது ஒரு ஊழல் வழக்கில், அதிலும் நாம் இவ்வளவு ஆதாரங்களை சேகரித்து புகாராக கொடுத்திருக்கிறோம். ஆதாரங்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டிருக்கிறது. அவர் ஒரு வழக்கறிஞர், அந்த எஃப்.ஐ.ஆர்-ஐ படித்தாலே எவ்வளவு ஆதாரம் இருக்கிறது, முகாந்திரம் இருக்கிறது என்று தெரியும். யாரும் வேலுமணியை குற்றவாளி என்று சொல்லவில்லை. முகாந்திரம் இருக்கிறது. அதனால், எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கிறார்கள். அவர் அதை ஒத்துக்கணுமா இல்லையா? ஆனால், அவர் எங்களுடைய புகாரை பொய் புகார் அளவுக்கு சொல்லி இருப்பது அர்த்தமில்லாத ஒன்று. அவர் சொல்வது ஊழலை ஆதரிக்கிறோம் என்று சொல்வதற்கு சமமானது. அவர் நேரடியாக ஊழலை ஆதரிக்கிறேன் என்று சொல்வதாக எங்களுக்கு அப்பட்டமாகத் தெரிகிறது. அதனால்தான், வானதி சீனிவாசனை நீங்கள் ஏன் ஊழலை அப்பட்டமாக ஆதரிக்கிறீர்கள் கேள்வி எழுப்புகிறோம்.
அப்படி அவர் உண்மையிலேயே இது பொய் புகார் என்று நினைக்கிறார் என்றால் விவாதிப்பதற்கு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை. எஸ்.பி. வேலுமணி, வானதி சீனிவாசன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவி செய்ததினால், அவங்களுக்கு வேற வழி இல்லாமல் இந்த மாதிரி ஆதரிக்கிறார்.” என்று கூறினார்.
எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கை தொடர்ந்து கண்காணித்து தொடர்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம வெங்கடேசன் கூறுகையில், “ஆமாம், நாங்கள் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டேதான் இருப்போம். விசாரணை இப்போதுதான் ஆரம்பமாகியிருக்கிறது. விசாரணை முறையான வழியில் சென்று முறைகேடில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிகாரிகள், மற்றும் இதில் யார் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்களுக்கு ஒரு வருட காலத்தில் தண்டனையை வாங்கி கொடுப்பதுதான் முக்கியம். அதனால், துரிதமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தல் போன்ற விஷயங்களை நாங்கள் செய்ய வைக்க வேண்டிய வேலை இருக்கிறது.” என்று கூறினார்.
கடந்த அதிமுக ஆட்சியைக் கண்காணித்ததைப் போல நடப்பு திமுக ஆட்சியையும் கண்காணிப்பீர்கள் இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயராம் வெங்கடேசன், “நிச்சயமாக நாங்கள் கண்காணிப்போம். நாங்கள் ஒரு புகாரை எழுப்புகிறோம் என்றால் பொதுவாக ஒரு 6 மாதத்தில் இருந்து 1 வருடம் வரை ஆராய்ச்சி பண்ணிதான், புகார் கொடுப்போம். இதை கடந்த ஆட்சியிலும் பார்த்திருக்கலாம். எங்களுடைய புகார்கள் ஆரம்பித்தது 2017ல் தான். அதற்காக 2015ம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்து 2016ல் ஆராய்ச்சிகள் எல்லாம் முடித்து 2017ல் தான் எங்களுடைய முதல் புகாரை கொடுக்கிறோம். ஏனென்றால், எங்களுடைய ஒவ்வொரு புகாரும், தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்க வேண்டும். அவர்கள் அதை மறுப்பார்கள். 2வது அப்பீல் வரைக்கும் போய் தகவல் வாங்க வேண்டும். அப்படி என்றால் ஒரு 6 மாத காலம் ஆகிவிடும். ஒவ்வொரு ஊழல் பற்றியும் நாம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் ஆதரங்களை சேகரிப்பதற்கெ 6 மாத காலம் ஆகிவிடும். நாம் ஆதாரங்கள் திரட்டாமல் செய்தால், அது ஒரு அர்த்தமற்றதாகிவிடும். ஆதாரங்களை முழுமையாக சேகரித்த பிறகுதான், அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்.
அதனால், வானதி சீனிவாசனுக்கு இப்போது எங்களுடைய கேள்வி அவர் ஏன் இப்படி ஊழலை அப்பட்டமாக ஆதரிக்கிறார் என்பதுதான். ஊழலுக்கு எதிரான கட்சி என்று சொல்லி 2014ல் மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால், அந்த கட்சி இப்படி ஊழலை அப்பட்டமாக ஆதரித்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“