'100 கோடி இருந்தால் அதிமுக ஜோலியை முடித்துவிடுவோம்'! நம்புகிற மாதிரி தான் பேசுகிறாரா ஆற்காடு வீராசாமி?

எம்.எல்.ஏ.க்களை இழுக்காமல் இருப்பதற்கு, ஸ்டாலின் ஜனநாயகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம். நாம் இன்று அப்படி செய்தால், நாளை அவர்களும் அதே போன்று செய்யக் கூடும்...

எங்களிடம் 100 கோடி ரூபாய் இருந்தால், ஒரே வாரத்தில் அதிமுகவின் 10 எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் இழுத்துவிட முடியும் என்று திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசை, மெஜாரிட்டி இல்லாத ஆட்சி என விமர்சிக்கும் ஸ்டாலினால் அதை கவிழ்க்க முடியவில்லையே என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ஆற்காடு வீராசாமி, “ஸ்டாலின், தான் நினைத்தால் ஒரு ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று நம்புவது தவறு. ஒரு ஆட்சி மக்களாலே தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஒருவரை ஆட்சியில் உட்கார வைப்பதோ அல்லது அகற்றுவதோ மக்கள் கையில் தான் உள்ளது. தனிப்பட்ட யார் கையிலும் அது இருப்பதாக நான் நினைக்கவில்லை. எப்பொழுது பெரும்பான்மை இல்லையோ, அப்போது அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்கும் என நினைக்கவில்லை. 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் என்று எடப்பாடி பழனிசாமியால் கூட சொல்ல முடியாது.

அதிமுகவிடம் இருக்கும் 10 எம்.எல்.ஏ.க்களை எங்கள் பக்கம் கொண்டு வரலாம் என நினைத்தால் எப்படி ஆட்சி நீடிக்க முடியும்?. எங்களுக்கு பண வசதி இருந்தால், அதனை செய்து காட்ட தயாராக இருக்கிறோம். பணம் இருந்தால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. பணம் கொடுத்து ஒரு ஆட்சியை கவிழ்ப்பது என்பது ஜனநாயகத்திற்கு விரோதமாக இருந்தாலும் கூட, அரசியலில் இது சகஜம். ஆட்சியை கவிழ்ப்பது என்பது எதிர்க்கட்சிக்கு ஏற்படுகின்ற வாய்ப்பு. தற்போதைய அதிமுக அரசு மீது மக்கள் மத்தியில் நல்ல எண்ணம் கிடையாது. மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் அதிமுகவில் உள்ள 10 எம்.எல்.ஏக்கள் எங்களை எங்கள் பக்கம் இழுத்தாலே போதும் ஆட்சி கவிழ்ந்துவிடும். இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

ரூ.10 கோடி கொடுத்தால், ஒரு எம்.எல்.ஏ வெளியேறுகிறார் என்றால், 10 எம்.எல்.ஏ.க்களுக்கு 100 கோடி ரூபாய் தேவை. ஆனால், அந்த 100 கோடி எங்கு இருக்கிறது? அப்படி இருந்தால், நிச்சயம் அதை செய்து காட்டுவேன். எம்.எல்.ஏ.க்களை இழுக்காமல் இருப்பதற்கு, ஸ்டாலின் ஜனநாயகத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே காரணம். நாம் இன்று அப்படி செய்தால், நாளை அவர்களும் அதே போன்று செய்யக் கூடும் என்று ஸ்டாலின் நினைக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், கட்சியிடம் அவ்வளவு நிதி இல்லை என்று ஆற்காட்டார் சொல்கிறார் என்று புரிகிறது. ஆனால், இதை நம்மால் நம்பத்தான் முடியவில்லை. ஏனெனில், கடந்த 2017ல் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கை ஒன்றில், நாட்டிலேயே அதிக வருவாய் உள்ள பணக்கார மாநில கட்சிகளில் திமுக முதலிடத்தையும், அதிமுக 2-ம் இடத்தையும் பிடித்திருந்தன. அதுமட்டுமின்றி, இக்கட்சிகள் வருவாயில் 80 சதவீதம் தொகையை செலவழிக்காமல் வைத்துள்ள தகவலும் ஆய்வில் தெரியவந்தது.

கடந்த 2015-16ம் ஆண்டு காலக்கட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவு கணக்குகள் குறித்து, அரசு சாரா நிறுவனமான ‘ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்’ ஆய்வு செய்தது. அந்த ஆய்வில் தான் இந்த முடிவுகள் வெளியானது.

அதிக வருவாய் பெற்ற மாநிலக் கட்சிகளில், திமுக ரூ.77 கோடியே 63 லட்சமும், அதிமுக ரூ.54 கோடியே 93 லட்சமும் வருவாய் ஈட்டி இருந்தன. இது மூன்றாண்டுகளுக்கு முன்னிருந்த நிலவரம். தற்போது, இக்கட்சிகளின் வரவு – செலவு நிச்சயம் அதிகரித்திருக்குமே தவிர குறைந்திருக்காது. அதுமட்டுமின்றி, 80 சதவீதம் அவர்கள் செலவு செய்யாமல் இருப்பும் வைத்திருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகாலத்திற்கு அந்த தொகையே, பல கோடிகளை தாண்டியிருக்கும்.

அப்படியிருக்க, 100 கோடி ரூபாய் கட்சியிடம் இல்லை என்று திமுகவின்மிக மூத்த தலைவரான ஆற்காடு வீராசாமி கூறியிருப்பது உண்மையா? இல்லையா? என்பது அவருக்கே வெளிச்சம்!.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close