Political Parties Opinion on Districts Separation: தமிழக அரசு கடந்த 8 மாதங்களில் மாவட்டங்களைப் பிரித்து 5 புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. இது குறித்து அரசியல் கட்சிகள் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு இந்த ஆண்டு தொடக்கத்தில் விழுப்புரம் மாவட்டத்தை பொதுமக்களின் வேண்டுகோளின்படியும் நிர்வாக வசதிக்காகவும் இரண்டாகப் பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் நேற்று தனது சுதந்திர தின உரையின்போது, வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து வேலூர் தனியாக ஒரு மாவட்டமாகவும், திருப்பத்தூரை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய மாவட்டமும், ராணிப்பேட்டையை தலைமையிடமாக ஒரு புதிய மாவட்டமும் உருவாக்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு கடந்த 8 மாதங்களில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியிருக்கிறது. புதிய மாவட்டங்கள் அறிவிக்கப்படும்போது மக்களின் கோரிக்கைப்படியும் நிர்வாக வசதிக்காகவும்தான் பிரிக்கப்படுகிறது என்று அரசு கூறுகிறது.
அரசு தொடர்ந்து மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்து வருவது குறித்து இந்தியக் குடியரசு கட்சி தலைவர் சே.கு.தமிழரசன் ஐ.இ.தமிழுக்கு பேசுகையில், “தமிழக அரசு பெரிய மாவட்டங்களை பிரிப்பது வரவேற்கப்பட வேண்டியதுதான். ஆனால், அது ஏதோ தேர்தல் வாக்குறுதிக்காக மாவட்டங்களை பிரித்து அறிவித்தோம் என்று இருக்க கூடாது. நான் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு இருந்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வெவ்வேறு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறேன். மேலும், நான் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில், வேலூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டத்தின் எல்லையிலிருந்து தருமபுரி மாவட்ட எல்லைவரை சுமார் 200 கி.மீ நீண்ட எல்லையைக் கொண்டது. அதனால், வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டிருப்பது சரிதான். ஆனால், மாவட்டங்களைப் பிரிக்கும்போது நிர்வாக வசதியையும் கருத்தில் கொள்ள வேண்டும். அப்படி நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு பிரிக்கப்பட்டிருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான்.
பல்வேறு பொதுமக்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிக்கும் அதே நேரத்தில், தமிழக அரசு, தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 39 மாவட்டங்களாக அறிவிப்பதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால், உதாரணத்துக்கு, அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்ட எல்லைகளில் வருகிறது. அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை எந்த மாவட்டத்துக்கு எவ்வளவு நிதியை ஒதுக்கீடு செய்வது என்பதில் சிக்கல் வருகிறது. அதே போல, அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அவருடையதொகுதி இடம்பெற்றிருக்கிற மாவட்டத்தின் வளர்ச்சிக் குழுவில் உறுப்பினராக இருக்கிறார். ஒரு உறுப்பினர் எப்படி 3 மாவட்டங்களில் நடைபெறும் மாவட்ட வளர்ச்சி குழு கூட்டத்தில் பங்கேற்று தனது கருத்தை தெரிவிக்க முடியும்? ஒரு நாடளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தை அவருடைய தொகுதியில் எந்த மாவட்டத்தில் அமைப்பது இப்படி நிர்வாக ரீதியாக நிறைய சிக்கல்கள் உள்ளன.
கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாவட்டங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளே மாவட்டங்களாக உள்ளன. அதனால், இந்த மாநிலங்களைப் போல தமிழகமும் 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் 39 மாவட்டங்களாக அறிவிக்கலாம்.
ஒரு மாவட்டம் உருவாக்கப்படுகிறது என்றால் அதற்கான உள்கட்டமைப்புக்கு சுமார் ரூ.70 கோடி செலவாகும். மேலும், அந்த மாவட்ட தலைமையகத்தில் செயல்படும் அதிகாரிகளுக்கு சம்பள செலவு, நிர்வாக நடைமுறை ஆகியவையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில், இதற்கு முன்னதாக, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் ஏற்கெனவே 40 - 50 ஆண்டுகளாக கோட்டாட்சியர் அலுவலகம் உள்ளது. அங்கே மாவட்ட தலைமையகம் உருவாக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் வரப்போகிறார். மற்ற மாவட்ட அதிகாரிகளும் வரப்போகிறார்கள் அவ்வளவுதான். இதில் பெரிய மாற்றம் ஒன்றும் நடந்துவிடவில்லை” என்று கூறினார்.
தமிழக அரசு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்கள் அறிவிப்பது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி ஐ.இ.தமிழுக்கு பேசுகையில், “மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்துள்ளது என்றால், தமிழகத்தில் அதிமுக அரசு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களாக அறிவித்துள்ளார்கள். மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்குவதனால் மாவட்ட தலைமையகத்துக்கும் பொதுமக்களுக்குமான உள்ள இடைவெளி தூரத்தின் அளவு குறையுமே தவிர வேறு ஒன்றும் நடப்பதில்லை.
சென்னையில், குடிநீரில் கழிவுநீர் கலந்துவருகிறது என்று மக்கள் புகார் கூறினார்கள். அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுதந்திர தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி தலைவர் இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றி என்ன செய்யப்போகிறீர்கள்; எப்படி அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவீர்கள் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் ஊராட்சி நிர்வாகம் முடங்கியுள்ளது. ஆனால், தமிழக அரசு, நிர்வாக வசதிக்காக மாவட்டங்களைப் பிரிப்பதாக கூறுகிறது. தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அங்கே எந்த மாற்றமும் நடக்கவில்லை. போதிய நிதி ஒதுக்கவில்லை. அது போல, இந்த அரசு மாவட்டங்களை பிரித்து அறிவிப்பதோடு நின்றுவிடாமல் நிர்வாக ரீதியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதிமுக அரசு மக்களின் உண்மையான அடிப்படை பிரச்னைகளிலிருந்து அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில், மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்து வருகிறது. அதிமுக அரசு உண்மையான மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் இது போல புதிய மாவட்டங்களை அறிவிக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துகிறது” என்று கூறினார்.
புதிய மாவட்டங்கள் அறிவிப்பு குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், “வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டங்களாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். திமுக பொருளாளர் துரைமுருகன் ஏற்கெனவே இதை வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அறிவிப்பதோடு நின்றுவிடாமல் அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
இவ்வாறு தமிழக அரசு மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்டங்களை அறிவிப்பது குறித்து அரசியல் கட்சியினர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர். தமிழக அரசு கவனத்தில் கொள்ளுமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.