தமிழில் வழக்காடும் உரிமைக்காக மதுரையில் வழக்கறிஞர்கள் 9 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு இதனை தொடங்கி வைத்தார்.
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதிடும் உரிமை வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் நெடுநாள் கோரிக்கை. இதற்காக ஏற்கனவே பல்வேறுகட்ட போராட்டங்களை வழக்கறிஞர்கள் நடத்தியிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்குகளும் இருக்கின்றன.
இந்தச் சூழலில் மேற்படி கோரிக்கைக்காக வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் 9 வழக்கறிஞர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள். மதுரை காளவாசலில், தியாகி சங்கரலிங்கனார் சந்திப்பில் ஜூலை 27-ம் தேதி (நேற்று) இந்த உண்ணாவிரதம் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு இதனை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நல்லகண்ணு பேசுகையில், ‘இந்த வழக்கறிஞர்களின் போராட்டம் நியாயமானது. அதனால்தான் உயர்நீதிமன்றமே இந்தப் போராட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கிறது. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறது. ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் வழக்குகளை அறிந்துகொள்ளவும் உணர்ந்து கொள்ளவுமே இந்தப் போராட்டம்! அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்.
இந்தியாவின் பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அவரவர் மொழியில் உயர்நீதிமன்றத்தில் வாதிடும் உரிமை வேண்டும். அரசியல் நிர்ணய சபை அமைந்தபோதே இந்த உரிமை வலியுறுத்தப்பட்டது. வடக்கில் சில மாநிலங்களில் இந்தியில் வாதிடும் உரிமை இருக்கிறது. அரசு அலுவல் பட்டியலில் உள்ள 20 மொழிகளுக்கும் அந்த உரிமையை வழங்கவேண்டும்’ என குறிப்பிட்டார் நல்லகண்ணு.
சென்னையிலும் அடுத்த வாரம் முதல் வழக்கறிஞர்கள் இதே கோரிக்கைக்காக போராட இருப்பதாக தெரிவித்தனர்.