தமிழ்நாடு முழுவதும் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் இன்று நடைபெறுகின்றன. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றங்கள் செய்யலாம்.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்கள் 01.01.2018-ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2018-ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 3-ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் 5 கோடியே 95 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.
மேலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 01.01.2018 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (அதாவது 01.01.2000-ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள்) படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஒரே சட்ட மன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடிவம் 8-ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் 31.10.2017-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (அக்டோபர் 22) காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. பொது மக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்ப்பிக்கவும் செய்யலாம். மேலும் பொது மக்கள் இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இணையதள சேவையினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
25 வயதுக்குட்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளிச்சான்றிதழ்களின் நகல்களை வழங்க வேண்டும் என்றும் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வாக்காளர் பட்டியலில் சேர படிவம் 6-ஐ பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் election.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இதற்கிடையே தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 78 ஆயிரத்து 665 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், மாநிலம் முழுவதும் கடந்த 8-ம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இணையதளம் மூலம் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.
இதுவரை மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 4 லட்சத்து 78 ஆயிரத்து 665 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முகவரி மாற்றத்தினால் நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 9ஆயிரத்து 880 ஆகும். இறப்பு காரணமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட எண்ணிக்கை 1 லட்சத்து 68 ஆயிரத்து 785 ஆகும். சென்னையில் அதிகளவில் இறப்பு காரணமாக 11 ஆயிரத்து 609 பேரும், முகவரி மாற்றம் காரணமாக 1லட்சத்து 62 ஆயிரத்து 911 பேர் நீக்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 520 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.