scorecardresearch

தொடர் அடக்குமுறைகளுக்கு ஆளாகும் காடர் பழங்குடியினர்; பட்டா நிலத்தில் குடிசைகளை அகற்றிய வனத்துறை

மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் போடப்பட்ட குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தீன் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர் அடக்குமுறைகளுக்கு ஆளாகும் காடர் பழங்குடியினர்; பட்டா நிலத்தில் குடிசைகளை அகற்றிய வனத்துறை

ATR forest officials removed Kadar huts : ஆனைமலை புலிகள் காப்பகத்தில் தொடர் போராட்டங்களுக்கு பிறகு கல்லாரில் வசித்து வந்த 21 காடர் பழங்குடி குடும்பத்தினருக்கு வன உரிமை அங்கீகார சட்டத்தின் கீழ், காடர்களின் அவர்கள் மூதாதையர்கள் வாழ்ந்த தெப்பக்குள மேட்டில் வசிக்க குடியிருப்பு பட்டாக்கள் வழங்கப்பட்டன. நவம்பர் 7ம் தேதி அவர்களுக்கு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பட்டாக்களை வழங்கிய நிலையில் ஒரே செட்டில் 23 குடும்பத்தினரும் கொட்டும் மழையிலும் வசித்து வந்தனர். சமீபத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 5 குடிசைகளை அமைத்துள்ளனர் காடர் பழங்குடியினர். ஆனால், அவர்களுக்கு நில அளவைத் துறை அளவு செய்து கொடுத்த இடங்களை தவிர்த்து இதர இடங்களில் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து குடிசைகள் அமைத்ததாக கூறி அவர்களின் குடிசைகளை அப்புறப்படுத்தியுள்ளனர் வனத்துறையினர்.

குடிசைகளை அகற்றும் வனத்துறையினர்

2018-19 ஆண்டுகளில் ஏற்பட்ட அளவுக்கு அதிகமான மழைப்பொழிவினால், இடைமலையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக தங்களின் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை இழந்த காடர் பழங்குடியினர் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பழத்தோட்டம் என்ற இடத்தில் குடிசை போட்டு தங்கினர். 24 மணி நேர கால அவகாசம் கூட தராமல் அவர்களின் குடிசைகளை பிரித்து வயதானவர்கள் முதற்கொண்டு அனைவரையும் தாய்முடி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புப் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். 80க்கும் மேற்பட்ட பழங்குடியினர் 6 குடியிருப்புப் பகுதியில் வாழும் அவல நிலை ஏற்பட்டது. 10 நாட்களில் மாற்று இடம் வழங்கப்படும் என்று கூறியிருந்த போதும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக போராட்டத்திற்கு பிறகே அவர்களுக்கு தெப்பக்குளமேட்டில் பட்டாக்கள் வழங்கப்பட்டன.

போதுமான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள், சுத்தமான குடிநீர், கழிப்பறை மற்றும் மின்சார வசதிக்கான வாய்ப்புகள் என்று புது வாழ்க்கையை எதிர்பார்த்து காத்திருந்த பழங்குடியின மக்களுக்கு வனத்துறையின் செயல் பெரும் வருத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நில அளவை செய்து ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில் காந்தி ஜெயந்தி அன்று அறவழிப் போராட்டத்தின் மூலம் தங்களின் உரிமையைப் பெற்ற பழங்குடிகளின் மகிழ்ச்சி சில வாரங்களுக்கு கூட நீடிக்கவில்லை.

2019ம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் கீழ் குடிருப்பதற்காக பட்டா வழங்க வேண்டும் என்று கூறி பேரணியில் ஈடுபட்ட மக்களை காவல் துறை கைது செய்தது. 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தெப்பக்குள மேட்டில் போராட்டம் நடத்திவிட்டு தாய்முடி எஸ்டேட் திரும்பிய காடர்கள் மீண்டும் போராட்ட களத்திற்கு செல்ல முடியாத வகையில் வனத்துறையினர் அங்கே அமர்த்தப்பட்டனர். இது போன்று வனத்துறையினரால் தங்களின் உரிமைகள் மீறப்படுவதை காடர் பழங்குடியினர் அனுபவித்து வந்த நிலையில் இச்சம்பவம் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளது.

5 குடிசைகளில் நான்கு குடிசைகள் முன்னறிவிப்பின்றி நீக்கப்பட்ட நிலையில் ஒரே ஒரு குடிசை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது என்று மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் ஆ. மணிகண்டன் வெளியிட்ட பத்திரிக்கை செய்திக் குறிப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

நில அளவை செய்யப்படாத இடங்களில் குடிசைகள் அமைக்கப்பட்டிருந்தால் அது தொடர்பாக முன்னறிவிப்பு செய்திருக்கலாம் அல்லது நோட்டீஸ் கொடுத்திருக்கலாம். அதை விடுத்து ஆரம்ப காலத்தில் வனத்துறையினர் பழங்குடியினரை கையாண்ட அதே விதத்தை தற்போதும் கடைபிடிக்கின்றனர் என்று பழங்குடி ஆர்வலர்கள் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

வனத்துறையினரின் இந்த செயலை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சியில் உள்ள அனைத்து அரசியல் சமூக இயக்கங்கள் சார்பில் இன்று பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் போடப்பட்ட குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தீன் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Atr forest officials removed kadar huts in theppakulamedu against tribes wish