தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினரே தாக்கியதாக கூறப்படும் விவகாரம் தமிழக கடலோர மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தும் சிங்கள கடற்படை, இவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துகொள்வது வாடிக்கை. பிறகு பலகட்டப் பேச்சுகளுக்கு பிறகு அந்தப் படகுகள் சில நேரங்களில் மீட்கப்படுகின்றன. அப்படி மீட்கப்பட்ட படகுகளை எடுத்து வர, நாகையை சேர்ந்த மீனவர்கள் ஒரு குழுவாக இலங்கைக்கு சென்றனர்.
படகுகளை எடுத்து வர இவர்களுக்கு போதிய டீசலை சிங்கள அரசு கொடுக்கவில்லை. இதனால் வரும் வழியில் ஒரு படகு பாதியில் நின்றது. அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இந்திய கடற்படையினர், மீனவர்களை சத்தம் போட்டனர். அப்போது மீனவர்களுக்கும், இந்திய கடற்படையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் நாகை மீனவர்களின் ஆடைகளை களைந்து சித்திரவதை செய்ததாகவும், வலைகளை பறிமுதல் செய்து கொண்டதாகவும் இந்திய கடற்படையினர் மீது கரை திரும்பிய மீனவர்கள் புகார் கூறினர். நாகையை சேர்ந்த செந்தில்குமார் உள்பட சில மீனவர்களை இந்திய கடற்படையினர் தாக்கியதாகவும் புகார் கூறப்படுகிறது.
இதுநாள் வரை சிங்கள கடற்படையினரின் தாக்குதலுக்குத்தான் பயந்து போயிருந்தார்கள் தமிழக மீனவர்கள். முதல் முறையாக வேலியே பயிரை மேய்ந்ததுபோல, இந்திய கடற்படையே தாக்கிய நிகழ்வு கடலோர மக்களை அதிர வைத்திருக்கிறது.