”கடனை திருப்பி கொடுக்க முடியாவிட்டால் எதற்கு உயிருடன் இருக்கிறாய்?”: இசக்கிமுத்துவை மிரட்டிய போலீஸ்?

இசக்கி முத்துவை காவல் துறை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசுவதாக கூறப்படும் ஆடியோ, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By: Published: October 25, 2017, 12:59:20 PM

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு முன்னதாக, சிகிச்சை பெற்றுவரும் இசக்கி முத்துவை காவல் துறை அதிகாரி ஒருவர் தரக்குறைவாக பேசுவதாக கூறப்படும் ஆடியோ, வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. எனினும், அந்த ஆடியோவின் உண்மை தன்மை குறித்து உறுதி செய்யப்படவில்லை.

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே, காசிதர்மம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி இசக்கிமுத்து. இவர், கடந்த 23-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தன் குடும்பத்துடன் வந்தார். திடீரென, தான் ஏற்கனவே கையில் வைத்திருந்த மண்ணெண்ணெயை தனது உடலிலும், தன் மனைவி சுப்புலட்சுமி உடலிலும், இரு பெண் குழந்தைகள் உடலிலும் ஊற்றி தீயை பற்ற வைத்தார்.

உடனடியாக, அங்கிருந்தவர்கள் நால்வரது உடலிலும் தண்ணீரையும் மண்ணையும் ஊற்றி தீயை அணைக்க முயன்றானர். இதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சுப்புலட்சுமி, இரு பெண் குழந்தைகளும் அன்றைய தினமே உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலைமையில் உள்ள இசக்கி முத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, போலீஸார் விசாரணையில் அவர்கள் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக, காசிதர்மத்தை சேந்த தளவாய்ராஜ், அவரது மனைவி, முத்துலெட்சுமி, தளவாய்ராஜின் தந்தை காளி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், உயிரிழந்த சுப்புலட்சுமி மற்றும் இசக்கிமுத்துவிடம் காவல் துறை அதிகாரி பேசுவதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆண் ஒருவர், “முத்துலட்சுமி, தளவாய்ராஜ், இவர்களது மகன் கார்த்தி, தளவாய்ராஜின் தந்தை காளி உள்ளிட்டோர் மீது நீங்கள் அளித்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. அதற்காக, நீங்கள் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு வரவேண்டும்”, என கூறுகிறார். அதற்கு, மறுமுனையில் உள்ள பெண், “வேலையில் அடிக்கடி விடுப்பு அளிக்கமாட்டார்கள். நான் திங்கள் கிழமை வருகிறேன்.”, என கூறுகிறார்.

அதேபோல், சிகிச்சை பெற்றுவரும் இசக்கிமுத்துவிடம் காவல் துறை அதிகாரி பேசுவதாக கூறப்படும் ஆடியோவில், ”நீயெல்லாம் எதற்கு வட்டிக்கு கடன் வாங்குகிறாய்? வாங்கிய கடனை கொடுக்க முடியாவிட்டால் எதற்கு உயிருடன் இருக்கிறாய்? எதற்காக மாவட்ட ஆட்சியர்”, என ஒருவர் மிரட்டும் தொனியில் பேசுகிறார்.

இந்த இரண்டு ஆடியோவிலும் பேசுபவர்கள் இசக்கிமுத்துவும், சுப்புலெட்சுமியும்தானா? அவர்களிடம் பேசுபவர் காவல் துறை அதிகாரிதானா? அவர் ஏன் இசக்கிமுத்துவை மிரட்டுகிறார் என்பது குறித்து உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.

இதனிடையே, கந்துவட்டி புகார்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Audio circulating in social media alleged police threatening esakki muthu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X