கருணாநிதியை நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழகிரி சந்தித்த காட்சி, கோபாலபுரத்தை உருக வைத்தது. ஸ்டாலின் பசும்பொன் சென்றுவிட்டதால் இதில் பங்கேற்கவில்லை.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சமீப நாட்களாக முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த 19-ம் தேதி கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள முரசொலி பவள விழா கண்காட்சியை பார்க்க அவரை அழைத்து வந்தனர். பார்வையாளர்களும் சமீப நாட்களாக அனுமதிக்கப் படுகிறார்கள்.
இன்று (30-ம் தேதி) கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் தனது கொள்ளுப் பேரன் மனு ரஞ்சித்தின் திருமணத்தை கருணாநிதி நடத்தி வைத்தார். மனு ரஞ்சித், கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் வழிப் பேரன் ஆவார். இவருக்கும் நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும் கடந்த ஆண்டு ஜூலையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதில் கருணாநிதி கலந்து கொண்டார். ஓராண்டுக்கு பிறகு அவர்களின் திருமணத்தையும் கருணாநிதியே நடத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியின் உடல்நிலை கருதி, இந்த திருமண விழாவுக்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். நீண்ட நாட்களாக அரசியல் காரணங்களால் முறுக்கிக் கொண்டிருக்கும் மு.க.அழகிரியையும், மு.க.ஸ்டாலினையும் இந்த விழாவில் கைகோர்க்க வைக்க உறவினர்கள் சிலர் முயற்சி செய்தனர்.
ஆனால் ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. முன் தினமே மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துவிட்ட அவர், பசும்பொன்னில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்திக்கி கிளம்பிச் சென்றுவிட்டார். இதனால் உறவினர்கள் வட்டாரத்தில் பலருக்கும் ஏமாற்றம்!
ஆனாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு அழகிரி தனது குடும்பத்தினருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வந்து இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டார். திருமண விழாவுக்கு முன்னதாகவே கருணாநிதியை அவரது அறையில் மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதியுடன் சென்று சந்தித்தார்.
அப்போது கருணாநிதியின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘எப்படிப்பா இருக்கீங்க! கொஞ்ச நாளைக்கு மதுரையில் வந்து இருக்கீங்களாப்பா!’என தளுதளுத்து உருகினார் அழகிரி. இயல்பாகவே அழகிரி மீது கருணாநிதிக்கு பாசம் அதிகம். அவரும் அரசியல் காரணங்களுக்காகவே அவரை விலக்கி வைத்தார்.
கருணாநிதி உடல் நலிவுற்ற பிறகு ஓரிரு முறை மட்டுமே அழகிரி கோபாலபுரம் வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் கருணாநிதியை சந்தித்து உருகியது மொத்த உறவு வட்டாரத்தையும் உருக வைத்துவிட்டதாக கூறுகிறார்கள். அழகிரி சந்திப்பின்போது கருணாநிதியும் கண்கள் கசிய நெகிழ்ச்சியுடன் இருந்ததாக திமுக வட்டாரத்தில் கூறுகின்றனர்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரான கனிமொழியும் இன்று கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை சந்தித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.