சென்னையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை சேலத்தில் மீட்கப்பட்டதையடுத்து, போலீஸ், வக்கீல் வேடத்தில் ஏற்கனவே பல்வேறு குற்றச்செயல்களில் பிடிபட்ட குற்றவாளி மணிமேகலை ஈடுபட்டு வந்துள்ள அதிர்ச்சிகர விஷயம் தெரிய வந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்த மணிமேகலை எனும் பெண்ணுக்கு 15 நாட்களுக்கு முன்னர் எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. பிறந்து 15 நாட்களேயான இந்த பெண் குழந்தை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை அருகே கடத்தப்பட்டது.
குழந்தையின் தாயார் மணிமேகலை அளித்த புகாரின் அடிப்படையில், விரைந்து செயல்பட்ட போலீசார், அடுத்த 14 மணி நேரத்தில் குழந்தையை சேலத்தில் மீட்டனர். மீட்கப்பட்ட குழ்தை தாய் மணிமேகலையிடம் ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் இதுகுறித்து கூறுகையில், நான் எனது கணவரை பிரிந்து வாழ்கிறேன். ஏற்கனவே இரண்டரை வயதில் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போதும், பெண் குழந்தை பிறந்ததால் அதனை தத்து கொடுக்க விரும்பினேன். எழும்பூர் அரசு மருத்துவமனையில் சுமித்ரா எனக்கு எல்லா உதவிகளையும் செய்ததால் எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அவர் மூலமாக குழந்தையை தத்து கொடுக்க விரும்பினேன். இந்த விஷயத்தை மணிமேகலைக்கு அவர் தெரிவித்தார். பின்னர், எனக்கு ரூ.30,000-மும், வேலையும் வாங்கிக் கொடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர். வேலை வாங்குவதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அவர்கள் கூறினர். அவர்களை நம்பி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு வைத்து எனது குழந்தையை கடத்திக் கொண்டு சென்று விட்டனர் என்றார் வருத்ததுடன்.
அதேசமயம், இச்சம்பவதிற்கு மூளையாக செயல்பட்ட மற்றுமொரு மணிமேகலை, சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தற்காலிக காவலாளியாக பணியாற்றிய சுமித்ரா மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளியான மணிமேகலையிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர விஷயங்கள் தெரிய வந்துள்ளது.
அதன்படி, சேலத்தில் உதவி காவல் ஆணையராகவும், வழக்கறிஞராகவும் வேலை பார்ப்பதாக கூறிக் கொண்டு வாடகை காரில் பந்தாவாக வலம் வருபவர் மணிமேகலை. சென்னை வரும் போது, நட்சத்திர ஹோட்டலில் தங்கும் இவர், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மணிமேகலை மீது பல்வேறு வழக்குகள் இருக்கலாம் என சந்தேகிக்கும் போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மணிமேகலையின் குழந்தை எனக் கூறப்படும் ஆண் குழந்தை சாய்நாத்தும், கடத்தப்பட்ட குழந்தை தான் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.