இரட்டை இலை சின்னத்தைப் மீட்பதற்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா தரகர்கள் நரேஷ், பாபு ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து டெல்லி திஹார் சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, அதிகாரிகளிடம் விசாரணைக்கு நல்ல முறையில் ஒத்துழைத்து வருவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தினகரன் மற்றும் மல்லிகார்ஜுனா தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து இருவரின் ஜாமீன் மனுக்கள் மீதான இரு தரப்பு வாதங்கள் கடந்த வெள்ளியன்று முடிவடைந்தது. அந்த மனுக்கள் மீது புதன்கிழமை(நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி பூனம் சவுத்ரி தெரிவித்து இருந்தார்.
ஆனால், நேற்று தீர்ப்பை தட்டச்சு செய்ய வேண்டிய உதவியாளர் விடுப்பில் இருந்ததால் இன்று(வியாழன்) தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
அதன்படி, இன்று மனுவை விசாரித்த நீதிபதி, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து தனது உத்தரவில், இருவரும் ரூ.5 லட்சத்திற்கு ஜாமீன் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அவர்களது பாஸ்போர்ட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். குறிப்பாக, சாட்சிகளை கலைக்க திட்டமிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.