கதிராமங்கலத்தில் அரசுக்கு 3 லட்சம் இழப்பு; ஜாமீன் வழங்க முடியாது! நீதிபதி உத்தரவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயராமன் உட்பட ஒன்பது பேரின் மீதான ஜாமீன் மனுவின் விசாரணை இன்று நடைபெற உள்ளது.

கதிராமங்கலத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஓஎன்ஜிசி சார்பில் எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்பட்டது. பல நூறு அடி ஆழத்தில் இருந்து இந்த கிணறுகள் மூலம் உறிஞ்சப்படும் கச்சா எண்ணெய், அங்கிருந்து குத்தாலம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஆழ்குழாய் அமைத்து கச்சா எண்ணெய் உறிஞ்சுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது, நிறம் மாறி நீர் மாசடைகிறது, விவசாய நிலங்கள் பாதிப்படைகிறது என குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஓஎன்ஜிசி எண்ணெய் குழாயில் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஏற்பட்ட கசிவு காரணமாக அதிலிருந்து வெளியேறிய கச்சா எண்ணெய் திறந்த வெளியில் ஓடி, அப்பகுதி வயல்களில் பரவியது. இதனால் பதற்றமடைந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும், எண்ணெய் கசிவை சரிசெய்ய வந்த அதிகாரிகளை ஊருக்குள் நுழைய விடாமல் போராட்டம் நடத்தினர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பில் மர்ம நபர்கள் தீ வைத்ததால், போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராடியவர்களை விடுவிக்கக்கோரி நான்காவது நாளாக இன்றும் கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயராமன் உட்பட ஒன்பது பேரின் மீதான ஜாமீன் மனு, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.  நீதிபதி தனது தீர்ப்பில், “கதிராமங்கலத்தில் நடந்த போராட்டத்தினால் அரசுக்கு ரூ.3 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இன்றளவும் கதிராமங்கலத்தில் அமைதி திரும்பாததால் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முன்னதாக, நேற்று சட்டப்பேரவையில் திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தற்போது கதிராமங்கலத்தில் போதுமான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது” என்றார். இந்நிலையில், கதிராமங்கலத்தில் இன்றளவும் அமைதி திரும்பாததால், ஒன்பது பேரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமீன் கொடுக்காததால், தொடர்ந்து கடையடைப்பு போராட்டம் தீவிரமடையும் என கதிராமங்கலம் மக்கள் எச்சரித்துள்ளனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close