சென்னையை விட்டு வெளியேற எம்.எல்.ஏ.க்களுக்கு தடை : எடப்பாடியின் ‘டீ பார்ட்டி’க்கு ஆஜராகவும் உத்தரவு

வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் சென்னையில்தான் தங்கியிருக்க வேண்டும். எடப்பாடி வழங்கும் ‘டீ பார்ட்டி’க்கு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் ஆஜராகிவிட வேண்டும்

சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் ஆளும்கட்சியைச் சேர்ந்த வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் சென்னையில்தான் தங்கியிருக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதி (திங்கட்கிழமை) நடைபெறவிருப்பதால் இந்தக் கட்டுப்பாடு!
தமிழக ஆட்சியை மட்டுமல்ல, அ.தி.மு.க. அம்மா அணியையும் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி காட்டுகிறார். ஜூலை 12-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பி.க்களை அழைத்து, நாடாளுமன்றத்தில் செயல்படவேண்டிய முறை குறித்து அவர் பாடம் நடத்தியது அந்த வகையில்தான்!
அதேபோல ஜனாதிபதி தேர்தலையொட்டி அ.தி.மு.க. அம்மா அணியின் 122 எம்.எல்.ஏ.க்களுக்கும் புதிய உத்தரவை எடப்பாடி பழனிச்சாமி போட்டிருக்கிறார்.
ஜூலை 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற கூட்ட அரங்கில் நடக்க இருக்கிறது. இதற்கான வாக்குப்பெட்டி, வாக்குச்சீட்டுகள் அனைத்தும் தயார்! பா.ஜ.க. மேலிடத்திற்கு வாக்கு கொடுத்தபடி அ.தி.மு.க. அம்மா அணியின் வாக்குகள் அனைத்தையும் பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு பெற்றுக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி இருக்கிறார். தேர்தலுக்கு 3 நாட்களே அவகாசம் இருக்கிறது. அவற்றில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளும் அடங்கும். இந்த இரு நாட்களும் சட்டமன்ற கூட்டம் இல்லை. எனவே வெளியூர் எம்.எல்.ஏ.க்கள் வழக்கம்போல ஊருக்கு போய்விட்டு திங்கட்கிழமை வாக்களிக்க வந்துவிடும் திட்டத்தில் இருந்தார்கள்.
ஆனால் இன்று காலையில் அம்மா அணியின் கொறடா தாமரை ராஜேந்திரன் மூலமாக ஆளும்கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு உத்தரவு வந்தது. ‘எம்.எல்.ஏ.க்கள் யாரும் சொந்த ஊருக்கு செல்லக்கூடாது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் வரை அனைவரும் சென்னையில் தங்கியிருக்க வேண்டும்’ என்பதே அந்த உத்தரவு!
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அலுவலகத்தில் இருந்தும் இந்த உத்தரவை எம்.எல்.ஏ.க்களுக்கு கண்டிப்புடன் கூறினர். வெளியூர் செல்லும் எம்.எல்.ஏ.க்கள் வாக்குப் பதிவன்று, ‘ரயில் கிடைக்கவில்லை; பிளைட் கிடைக்கவில்லை’ என காரணம் கூறி வாக்குப்பதிவை தவிர்த்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு!
இதையும் மீறி எம்.எல்.ஏ.க்கள் வெளியூர் செல்வதை தடுக்க ஞாயிற்றுக்கிழமை மாலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் அதிகாரபூர்வ இல்லத்தில் 122 எம்.எல்.ஏ.க்களுக்கு ‘டீ பார்ட்டி’ கொடுக்க முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி. அந்த ‘டீ பார்ட்டி’க்கும் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தவறாமல் ஆஜராகிவிட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளில் மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த தமீமுன் அன்சாரி, காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாருக்கு வாக்களிக்க இருப்பதாக ஏற்கனவே தெரிவித்துவிட்டார். கொங்கு இளைஞர் பேரவை தனியரசையும், முக்குலத்தோர் புலிப்படை கருணாஸையும் முதல்வரின் ‘டீ பார்ட்டி’க்கு அழைத்திருக்கிறார்கள்.
ஒன்றுக்கு ரெண்டு ‘செக்’ வைத்துதான் எம்.எல்.ஏ.க்களை கட்டிப்போட வேண்டியிருக்கிறது.

×Close
×Close