விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி, ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கை அரசின் நிர்ப்பந்தம் காரணமாக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பல நாடுகள் தடை விதித்தன. குறிப்பாக 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நிகழ்வுக்கு பிறகு, தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நிலைப்பாடை பெரும்பாலான நாடுகள் எடுத்தன. அந்த வகையில்தான் 28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியன் மொத்தம் 22 அமைப்புகளுக்கும், 13 தனி நபர்களுக்கும் தடை விதித்தது.
தடை செய்யப்பட்ட அமைப்புகளில் பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் அடங்கும். ஹமாஸை 2003-ம் ஆண்டும், புலிகள் இயக்கத்தை 2006-ம் ஆண்டும் ஐரோப்பிய யூனியன் தடை செய்திருந்தது.
இதை எதிர்த்து லக்ஸம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய யூனியன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் ஹமாஸ் மீதான தடை விலக்கப்படவில்லை. ஆனால் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கி ஜூலை 26 அன்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவில், ‘2009-ம் ஆண்டு ராணுவரீதியாக புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அந்த இயக்கத்தால் ஆபத்து ஏற்படும் என சொல்ல முடியாது. அதற்கான எந்த ஆதாரத்தையும் ஐரோப்பிய யூனியனால் சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே புலிகள் மீதான தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நாடுகளிலும் முடக்கி வைக்கப்பட்ட புலிகளின் பணம், ஈழத் தமிழர்களிடம் வந்து சேரும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. புலிகள் அமைப்பு பெயரிலேயே ஐரோப்பிய நாடுகளில் இயங்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதை பின்பற்றி இந்தியாவும் புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும் என பழ.நெடுமாறன் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் பலர் வேண்டுகோள் வைத்துள்ளனர்.