பாமகவை சீண்டிய பெங்களூர் புகழேந்தி நீக்கம்; அதிமுக அதிரடி நடவடிக்கை

பெங்களூரு புகழேந்தி, அன்புமணிக்கு பதிலடி கொடுத்து பேசியதும் சசிகலா ஆடியோ விவகாரத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை எதித்து பேசியதும்தான் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கு காரணம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

pugazhenghi sacked from aiadmk, pugazhenghi, aiadmk, ops, eps, pmk, anbumani, புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கம், ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி, அதிமுக, பாமக, அன்புமணி, o panneerselvam, edappadi k palaniswami

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விமர்சித்ததால் பாமகவை விமர்சித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தியை அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கபட்டுள்ளார்.

அதிமுகவில் செய்தித் தொடர்பாளராக ஊடகங்களின் விவாதங்களில் அனைத்திலும் அனல் பறக்க பேசி வந்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டிருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழேந்தி நீக்கப்படுவதற்கு பின்னணி என்ன என்று விசாரித்தபோது இதுதான் காரணம் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவினாலும் பலமான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. அதிமுக வெற்றி பெற்ற 66 தொகுதிகளில் 45 இடங்களுக்கு மேல் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் உள்ள தொகுதிகள் ஆகும். இதற்கு காரணம், அதிமுக தேர்தல் அறிவிப்பதற்கு கடைசி நேரத்துக்கு முன்பு நிறைவேற்றிய வன்னியர்களுக்கு 10.5 சதவீ உள் ஒதுக்கீடு சட்டம் முக்கிய காரணம் என்று கூறப்பட்டது.

அதிமுகவில் தேர்தல் தோல்வி பற்றி நடந்த விவாதத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கு 10.5 உள் இட ஒதுக்கிடுதான் தென் மாவட்டங்களில் அதிமுக தோல்வியடைவதற்கு காரணம் சென்று விமர்சனம் வைத்ததாக செய்திகள் வெளியானது.

ஓ.பி.எஸ்-ஸின் விமர்சனம் பாமகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ்-க்கு பதிலளிக்கும் விதமாக பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி, ஓ.பி.எஸ்-ஐ தாங்கல் பொருட்டாக கருதுவதில்லை. ஓ.பி.எஸ்.க்கு தென் மாவட்டங்களில் செல்வாக்கு இல்லை என்ற தொணியில் விமர்சித்துள்ளார். அன்புமணியின் இந்த பேச்சு அதிமுககவில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளரான புகழேந்தி அன்புமணியின் விமர்சனம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்று எச்சரித்தார்.

இது குறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “தமிழ்நாட்டில் 53 ஆண்டுகளாக திமுகவும் அதிமுகவும் மாறி மாறி வெற்றி பெற்று ஆட்சி புரிந்து வருகின்றன. இதில் அதிக முறை அதிமுக தான் ஆட்சியில் இருந்துள்ளது. ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி மக்களால் நிர்ணயிக்கப்படுகிறது.

அதிமுக கூட்டணியிலிருந்து கொண்டு 23 இடங்களைப் பெற்றுக்கொண்ட அன்புமணி ராமதாஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் பற்றி தேவையில்லாத கருத்துகளைக் கூறி வருகிறார். பாமக இல்லை என்றால் 20 இடங்களில்தான் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என்று கூறுகிறார். 23 இடங்களில் 18 இடங்களில் தோல்வியடைந்ததைப் பற்றி பாமக முதலில் ஆய்வு செய்ய வேண்டும். அதில் யாரும் தலையிட விரும்பவில்லை. ஆனால், எங்கள் கட்சியின் தலைவர்களைப் பற்றிப் பேசுவது முறையானதல்ல. பாமகவால் எந்த வகையிலும் எந்த உதவியும் இல்லை. இதை உணர வேண்டும்.

நடந்து முடிந்த தேர்தலில் போடிநாயக்கனூர், எடப்பாடி, அவினாசி உள்பட 51 தொகுதிகளில் 2016 தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளோம். ஒரத்தநாடு, கன்னியாகுமரி உள்பட 9 தொகுதிகளில் பாமகவிற்கு எந்த பங்கும் கிடையாது. வெற்றி பெற்ற தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டுமே பாமகவின் செயல்பாடுகள் உள்ளன. நிலைமை இப்படியிருக்க பாமக இல்லை என்றால் அதிமுகவால் வெற்றி பெற்றிருக்க முடியாது என சொல்லலாமா?

தேக்கு மரத்தில் மரங்கொத்தி அமர்ந்து கொத்திக் கொண்டு இருந்தபோது, சிறிய சலசலப்பு ஏற்பட்டதைக் கண்டதும், தான் கொத்தியாலே தேக்கு மரம் விழுந்து விடும் என மரங்கொத்தி நினைத்ததாம். அதுபோல அன்புமணியின் பேச்சு உள்ளது. ஒ.பன்னீர்செல்வம் கையெழுத்துப் போட்டதால்தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உதவியுடன்தான் அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா எம்பி ஆனார். அதனால், அன்புமணி அதிமுக பற்றி தவறாகப் பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. எங்கள் கட்சித் தலைவர்களைக் குறை சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு கூட்டணியில் சேருவது பின்னர் வெளியே வருவது. எங்களால் தான் எல்லாமே நடந்தது என்று சொல்வதை ஏற்க முடியாது. பாஜக, பாமக கட்சிகளுடன் பயணித்தால் தோற்றோம் என்று எங்கள் கட்சித் தலைவர்களோ நிர்வாகிகளோ பேசவே இல்லை. தோல்வியை ஒப்புக்கொண்டோம். நல்லெண்ண அடிப்படையில் தான் 10.5 சதவீதம் அறிவிக்கப்பட்டது. இது மற்ற வகுப்பினருக்கு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.

அதுமட்டுமில்லாமல், சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசிய ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கண்டித்துப் பேசினார். இதற்கு புகழேந்தி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகப் பேசினார். அதிமுக தொண்டர்களுடன் பேசுவதற்கு சசிகலாவுக்கு உரிமை உள்ளது. இதை கே.பி.முனுசாமி எதிர்க்கத் தேவையில்லை என்று பேசியிருந்தார். இது அதிமுகவுக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், இன்று மாலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டா வெளியிட்டுள்ள் அறிகையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளனர்.

பெங்களூரு புகழேந்தி, அன்புமணிக்கு பதிலடி கொடுத்து பேசி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியதும் சசிகலா ஆடியோ விவகாரத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியை எதித்து பேசியதும்தான் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதற்கு காரணம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புகழேந்தி தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது: “அகம்பாவம், ஆணவம், திமிர் அத்தனையையும் இடிஅமீன் போன்றவர்களிடம் பார்த்தோம். அதை இன்றைக்கு தொடந்து, எனது அன்புக்குரிய பழைய நண்பர் எடப்பாடி பழனிசாமியிடம் பார்க்கிறேன். அந்த கட்சியை அவருடைய கைக்குள் கொண்டுவந்து கட்சியில் இருப்பவர்கள் அனைவரையும் அடிமையாக நடத்த வேண்டும் என்று பார்க்கிறார். அதிமுக இவ்வளவு பெரிய கட்சி, தலைவர், அம்மா வளர்த்த கட்சி. இந்த கட்சியை அசிங்கப்படுத்தி பேசிவர்களுக்கு கண்டனம் தெரிவித்து கருத்துகளைச் சொன்னேன். இதிலென்ன தப்பு இருக்கிறது? இந்த கட்சியினுடைய (அதிமுக) அழிவு ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமியால் ஆரம்பமாகிவிட்டது. இப்போது அவர் நம்மையும் அழைக்கிறார் அரசியல் ரீதியாக வா மோதலாம் என்று அழைகிறார். அதற்கு நானும் தயார்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா காலிலே விழுந்தது போல நேரடியாக சென்று அன்புமணி காலிலே விழுந்துவிடலாம். இடிஅமீனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் வித்தியாசம் இல்லை. நான் பெரிய அளவிலே பத்திரிகையாளர்களை சந்திப்பேன். என்ன நடந்தது என்பதை வெளிக்கொணர்வோம். பார்ப்போம் பழனிசாமி உன்களுக்கும் எனக்கு என்னவென்பதைப் பார்ப்போம்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bangalore pugazhendhi sacked from aiadmk

Next Story
பாகுபலி-2-வின் அடுத்த சாதனை… உலகளவில் 9,000 திரையரங்குகளில் ரிலீஸ்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com