தமிழக ஆளுநராக பதவியேற்றார் பன்வாரிலால் புரோஹித்

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

By: Updated: October 6, 2017, 10:32:01 AM

தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோஹித்துக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மஹராஷ்டிரா ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் தமிழகத்திற்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஓராண்டாக தமிழகத்திற்கு நிரந்த ஆளுநர் நியமிக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழகத்திற்கு புதிய ஆளுநராக மேகாலய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அறிவித்தார்.

இதையடுத்து, பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு சென்னை விமான நிலையத்தில் வியாழக்கிழமை பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இதையடுத்து, வித்யாசாகர் ராவ் தமிழகத்திலிருந்து விடைபெற்றுக் கொண்டார். அன்றைய தினமே புதிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை வந்தார்.

அவர் இன்று பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டதன்படி, காலை 9.30 மணியளவில் ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தின் 29-வது ஆளுனராக  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திமுக சார்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், பாஜக சார்பாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமான பதவியேற்பு நிகழ்ச்சி ஐந்தே நிமிடங்களில் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது. பதவியேற்பு முடிந்ததும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கைகுலுக்கி கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடியுடன் கவர்னர் கை குலுக்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து கவர்னருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக அமைச்சர்கள் வரிசையாக வந்து கவர்னருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருகில் நின்றபடி கவர்னருக்கு அறிமுகம் செய்தார். அதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் வரிசையாக வந்து வாழ்த்து கூறினர்.

பாஜக தரப்பில் மூத்த தலைவர் இல.கணேசன், தமிழிசை, வானதி சீனிவாசன் ஆகியோஈர் வந்து வாழ்த்து கூறிவிட்டு கவர்னர் அருகிலேயே நின்றனர். தொடர்ந்து ஒரு டஜனுக்கும் அதிகமாக அணிவகுத்து வந்த பாஜக மாநில நிர்வாகிகளை கவர்னருக்கு இவர்கள் அறிமுகம் செய்தனர். எடப்பாடி தனது அமைச்சரவை சகாக்களை அறிமுகம் செய்ததற்கு இணையாக இந்தக் காட்சி இருந்தது. மாநில உயர் அதிகாரிகள், அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் நேரில் வந்து வாழ்த்தினர். பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Banwarilal prohit sweared in as a new governor of tamilnadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X