ஆளுனருக்கு கருப்புக் கொடி காட்டும் முன்பே திமுக.வினரை கைது செய்வதா? மு.க.ஸ்டாலின் கண்டனம்

'தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்?'

ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கருப்புக் கொடி காட்டும் முன்பே திமுக.வினரை கைது செய்வதா? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், இன்று (மே 11) விருதுநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். வழக்கம்போல அவரது பயணத்தில் கருப்புக் கொடி காட்ட திமுக திட்டமிட்டது. இதையொட்டி திமுக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்தனர்.

ஆளுனருக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற திமுக.வினர் கைது செய்யப்பட்டது குறித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்த அறிக்கை வருமாறு : ‘மாநில சுயாட்சி கொள்கைக்கும், மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையிலான அரசியல் சட்டத்திற்கும் முற்றிலும் விரோதமாக, ஏற்கனவே மேற்கொண்ட மாவட்ட ஆய்வுகளின் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அதிகாரிகளுடன் மாண்புமிகு ஆளுநர் ஆய்வு மேற்கொள்வதை கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்துவதற்கு முன்பே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில், கழகத்தினரைக் கைது செய்வதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு முன் மாண்புமிகு ஆளுநர் ஆய்வுக்காக சென்ற இடங்களில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்திய போது எல்லாம் அமைதி காத்த தமிழக காவல்துறை, விருதுநகர் மாவட்டத்திற்கு ஆளுநர் செல்லும் போது மட்டும் தி.மு.க.வினரை கைது செய்தது ஏன்? தமிழகத்தில் நடப்பது ‘போலீஸ்ராஜ்யம்’தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்காட்டவா?’. இவ்வாறு மு.க.ஸ்டாலின் அறிக்கை விட்டார்.

 

×Close
×Close