தொடர்ச்சியாக இரவு நேரங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாக, சென்னையை சேர்ந்த பிபிஏ பட்டதாரியை காவல் துறையினர் கைது செய்தனர்.
கடந்த சில மாதங்களாக ஓட்டேரி, பேசின் பிரிட்ஜ், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்த நிலையில், சிறப்பு குழுவை அமைத்து காவல் துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதையடுத்து, மேற்கண்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில், இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் சென்று வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி புளியந்தோப்பில் காவல் துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி, உரிமையாளரிடம் ஓட்டுநர் உரிமம் கேட்டதாகவும், அப்போது அந்நபர் தன் பாக்கெட்டில் இருந்து அதனை எடுத்தபோது அறுந்த தங்க செயின் ஒன்று கிழே விழுந்ததாகவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் மீது சந்தேகமடைந்து காவல் துறையினர் மேலும் விசாரிக்கையில் அவரிடம் மேலும் இரண்டு தங்க சங்கிலிகள் இருந்தது தெரியவந்தது. இதன்பின், அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அந்நபர் புளியந்தோப்பை சேர்ந்த அனீஷ் முகமது என்பதும், அவர் பி.பி.ஏ. பட்டதாரி என்பதும் தெரியவந்தது. தான் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்ததாகவும், ஒருநாள் தனக்கு அறிமுகமான ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்டு பொருளீட்ட தான் துணைபுரிவதாக கூறியதாகவும் அனீஷ் முகமது காவல் துறையினரிடம் தெரிவித்தார். அப்போதிலிருந்து அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்துகொண்டு, அனீஷ் முகமது இருசக்கர வாகனத்தை ஓட்ட, மற்றொருவ செயினை பறித்துக்கொண்டு இருவரும் தப்பித்துவிடுவதாக அனீஷ் கூறியதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
அதன்பின், திருட்டு நகைகளை இருவரும் அடகு கடைகளில் விற்று பணமாக்கிவிடுவதாகவும், இவ்வாறி தான் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தன் மனைவிக்கு தெரியாது எனவும் அனீஷ் காவல் துறை விசாரணையில் தெரிவித்தார்.
இதையடுத்து, அனீஷ் முகமதுவை கைது செய்த காவல் துறையினர், அவரது நண்பரை தேடி வருகின்றனர்.