இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே ஒலிபரப்பப்பட்டு வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு ஞாயிற்றுக் கிழமையுடன் நிறுத்தப்பட்டது.
பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். கடந்த 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிபிசி வானொலிச் சேவையின் சிற்றலை ஒலிபரப்பானது. ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது. இதன் மூலம் தனது 76 ஆண்டுகால சிற்றலை பயணத்தை பிபிசி தமிழோசை முடித்துக் கொண்டது. தொலைக்காட்சி, இணையம், போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தின் காரணமாக சிற்றலைக்கான ஆதரவு மக்களிடையே குறைந்து போனது. இதன் காரணமாகவே பிபிசி தமிழோசையின் சிற்றலை தனது 76-ஆண்டு கால பயணத்தை முடித்துக் கொண்டது.
பிபிசி தமிழோசையானது தொடக்கத்தில் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்தது. பின்னர், 1980 கால கட்டத்தில் வாரத்திற்கு இரண்டு முறை ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் அதற்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தினமும் இரவு 9:15 மணி முதல் 9:45 மணி வரை ஒலிபரப்பு செய்யப்பட்டு வந்தது. இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு, செய்தியரங்கம் பகுதியில் அவைகள் குறித்து ஆராயப்பட்டும் வந்தது.
கடந்த 2015-ம் ஆண்டு மே-3-ம் தேதி 75-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த தமிழோசைக்கு பவளவிழா தொடங்கியது. இதனிடையே பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, கடந்த ஏப்ரல் மாதம் 30-ம் தேதியோடு நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமையுடன் பிபிசி-யின் தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகம் மற்றும் இலங்கையில் உள்ள மக்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், சர்வதேச நிகழ்வுகளை அறிந்து கொள்ளவும் பிபிசி தமிழோசையை கேட்டு வந்தனர். இது போன்ற செய்திகள் ஒலிபரப்பு அப்போதைய காலகட்டத்தில் தமிழில் ஒலிபரப்பு செய்யப்பட்டதால், பிபிசி தமிழோசைக்கு நேயர்கள் அதிகமாக இருந்து வந்தனர்.
இது குறித்து பிபிசி தெரிவித்துள்ளதாவது, 1980 காலககட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற போர் குறித்த செய்திகளை மக்களுக்கு வழங்குவதில் பிபிசி தமிழோசை முக்கிய பங்காற்றியது. தற்போது, சிற்றலை நேயர்கள் ஏராளமானோர் செய்திகளை அறிந்து கொள்வதற்காக தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றை நாடிச் சென்றுவிட்டனர். ஆதலால், பிபிசி தமிழோசை சிற்றைலையில் ஒலிபரப்பப்படுவது நிறுத்தப்படுகிறது. எனினும், இணையதளத்தில் தொடர்ந்து ஒலிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.