பல் மருத்துவக் கலந்தாய்வில் விண்ணப்பிக்காதவர்களும் பங்கேற்கலாம் என மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவக் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி முதல் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கடந்த 3-ம் தேதியுடன் முடிவடைந்தது. தொடர்ந்து, முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் அதற்கடுத்த நாளான திங்கள்கிழமை தொடங்கியது.
இதையடுத்து, பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இதில், முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் தனியார் கல்லூரிகளில் உள்ள நெயர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் 601 காலியாக உள்ளன.எனவே, இவற்றை நிரப்பும் வகையில், மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதவர்களும் நேரடியாக கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏற்கனவே நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பித்து முதல் கட்ட கலந்தாய்வில் இடங்களை பெறாதோர், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆனால் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்காதோர், சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு மருத்துவமனையில் புதன்கிழமை (இன்று) நடைபெறும் கலந்தாய்வில் பிற்பகல் 2 மணியளவில் நேரடியாக பங்கேற்கலாம். உரிய ஆவணங்களுடன் கலந்தாய்வுக்கு வர வேண்டும். கலந்தாய்வில் பங்கேற்கும் போது, ரூ.500-க்கு செயல்முறை கட்டணத்துக்கான வரைவோலையை சமர்பிக்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை பெற்றவர்கள் கலந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவின் படி அகில இந்திய இடங்களை காலி செய்யக் கூடாது எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தகவல்களுக்கு www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதள பக்கத்தை காணலாம்.