நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதிகவின் இரு அணிகள் இணைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி (நாளை) நடைபெறவுள்ளது. அட்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் விவகாரம் குறித்து முக்கிய முடிவெடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பொதுக் குழுவை எதிர்த்து, டி.டி.வி தினகரன் ஆதரவாளரான வட சென்னை வடக்கு மாவட்ட செயலாளர், பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் எம்.எல்.ஏ சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதன் மீது விசாரணை நடத்திய தனி நீதிபதி, அதிமுக பொதுக் குழுக் கூட்டதிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து வெற்றிவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான தீர்ப்பு இன்னும் சில நிமிடங்களில் வரவுள்ளது.
இதனிடையே, அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து, பெங்களூரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணை வருகிற அக்டோபர் 13-ம் தேதி ஒத்தி வைத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.