சசிகலாவின் ஜெயில் வீடியோக்கள் : கோடிகளில் ஏலம் போவதாக பரபரப்பு

அதிகாரிகளுடன் சகஜமாக சசிகலா பேசும் வீடியோக்கள் வெளியானால், கர்நாடக அரசுக்கே தலைவலியாக அமையும்.

சசிகலாவின் ஜெயில் வீடியோக்கள் புதிதாக கிடைத்தால், அதுதான் இப்போது தேசிய அளவில் சேனல்களுக்கு பிரேக்கிங் நியூஸ்! இதற்காக மேற்படி வீடியோக்களுக்கு கோடிகளில் விலைபேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அ.தி.மு.க. (அம்மா அணி) பொதுச்செயலாளரான சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கு தண்டனை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைபட்டிருக்கிறார். பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜி.யான ரூபா, சிறையில் சசிகலா அனுபவித்து வரும் சலுகைகளை அண்மையில் அம்பலப்படுத்தியதும் இந்த விவகாரம் தேசிய அளவில் ‘ஹாட் நியூஸ்’ ஆனது.
இதற்கு ஆதாரமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா பயன்படுத்திய 5 அறைகளின் படங்கள் வெளிவந்தன. அதோடு சசிகலா சல்வார் கமீஸில் சிறை வளாகத்தில் சூட்கேஸ் சகிதமாக செல்வதாக வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை உருவாக்கியது.
இதேபோல போலீஸ் அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள் சிலருடன் சசிகலா அமர்ந்து பேசும் காட்சிகள் அடங்கிய சில வீடியோக்கள் இன்னும் வெளிவராமல் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. சிறையில் உள்ள தாதா ஒருவர் இந்த வீடியோக்களை எடுத்து வைத்திருப்பதாக ஒரு தரப்பும், ரூபாவே மேற்படி வீடியோக்களை கைப்பற்றி வைத்திருப்பதாக இன்னொரு தரப்பும் தகவல்களை வெளிப்படுத்துகிறார்கள். ரூபா தற்போது சிறைத்துறையில் இருந்து, போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டாலும் தினம்தோறும் சசிகலா சம்பந்தப்பட்ட வீடியோக்களை கேட்டு அவரை மீடியாக்கள் மொய்க்கின்றன. இதனால் இப்போது தனது செல்போனையே சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, ‘எஸ்கேப்’ ஆகியிருக்கிறார் ரூபா.
மீடியாக்களில் இன்னொரு தரப்பு சிறைத்துறை அதிகாரிகளையும், சிறையில் உள்ள தாதாக்களுக்கு வேண்டியவர்களையும் வீடியோக்களுக்காக முற்றுகை இட்டுள்ளனர். இதற்காக மீடியாக்களின் மார்க்கெட்டிங் பிரமுகர்கள் களமிறங்கி, கோடிக்கணக்கில் பேரம் பேசி வருகிறார்கள்.
ஒருவேளை அதிகாரிகளுடன் சகஜமாக சசிகலா பேசும் வீடியோக்கள் வெளியானால், கர்நாடக அரசுக்கே தலைவலியாக அமையும். எனவே அரசுத் தரப்பும் புதிய வீடியோக்கள் இருக்கிறதா? என மும்முரமாக தேடுதல் வேட்டை நடத்துகிறது. தமிழகத்தில் இரு பெரும் கட்சிகளும் இந்த விஷயத்தில் களம் இறங்கியிருக்கின்றன. ‘ஏதாவது வீடியோ இருந்தால், எவ்வளவு செலவானாலும் அதை கைப்பற்றி வெளியே விடாமல் மறைக்க வேண்டும்’ என்பது ஒரு கட்சியின் இலக்கு. இன்னொரு கட்சியோ, ‘எப்படியாவது அந்த வீடியோவை வெளியே வர வைக்கவேண்டும்’ என இயங்குகிறதாம்.
புதிய வீடியோக்கள் வெளியானால் தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய இரு மாநில அரசியலும் ஒரே நேரத்தில் அதிரும்.

×Close
×Close