ஆயுத பூஜை உள்ளிட்ட தொடர்ச்சியான 4 நாள் அரசு விடுமுறை காரணமாக ஏ.டி.எம்.களில் பணத் தட்டுப்பாடு அபாயம் இருக்கிறது. வாடிக்கையாளர்கள் உஷார்!
மத்திய மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, ஏடிஎம்-கள் செயல்பாடு பெருமளவு பாதிக்கப்பட்டது. அந்த நிலைமை சீராகிவிட்டதாகச் சொன்னாலும், விடுமுறைக் காலங்களில் நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகே ஏடிஎம்-களிலிருந்து பணம் பெற முடிகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 29-ம் தேதி முதல் சரஸ்வதி பூஜை, காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர்ச்சியாக மொத்தம் 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. பண்டிகை காலம் என்பதாலும், சம்பளத் தேதி என்பதாலும் பொதுமக்கள் ஏடிஎம்-களை நாடும் நிலை அதிகரிப்பதால், பணத்தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு உரிய ஏற்பாடுகளைச் செய்ய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ரிசர்வ் வங்கியின் உத்தரவுபடி, ஏடிஎம் ஒன்றில் 2,000, 500 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் வீதம் ரூ.54 லட்சம் வரை வைக்கப்படும். இதன் மூலம் விடுமுறை நாட்களிலும் ஏடிஎம்-களிலிருந்து பொதுமக்கள் தடையின்றி பணம் எடுத்துக் கொள்ள முடியும்’ என்றார்.
வங்கி அதிகாரிகள் கூறுகையில், ‘அனைவரும் ஏடிஎம்-களை மட்டுமே நம்பியிராமல் முன் தினமே வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று தேவையான தொகையை எடுத்து வைத்துக் கொள்வது நல்லது’ என்றார்கள்.
வாடிக்கையாளர்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்.
,