பாரத ரத்னா விருது கேட்டு கருணாநிதிக்காக எழும் கோரிக்கைகள் அதிமுக.வை பதற்றப் படுத்துகிறது. ஜெயலலிதாவை தவிர்த்துவிட்டு, கருணாநிதிக்கு மத்திய அரசு வழங்குமா?
பாரத ரத்னா, இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது! முதன்முதலாக 1954-ம் ஆண்டு இந்த விருது உருவாக்கி வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு வரை மொத்தம் 45 பேர் பாரத ரத்னா விருது பெற்றிருக்கிறார்கள்.
பாரத ரத்னா விருதை முதன்முதலாக 1954-ல் பெற்றவர், தமிழக முன்னாள் முதல்வரான ராஜாஜி தான்! அதே ஆண்டு தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் பாரத ரத்னா விருது பெற்றார்.
1976-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் காமராஜர், 1988-ல் எம்.ஜி.ஆர், 97-ல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், 98-ல் இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமி, 98-ல் பசுமைப் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சி.சுப்பிரமணியம் ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து மேற்கண்ட 7 பேர் பாரத ரத்னா விருது பெற்றனர். கடந்த (ஆகஸ்ட்) 7-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முதல் நபராக திருமாவளவன் எழுப்பினார்.
தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா அதே கோரிக்கையை முன்வைத்து பேசினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் இதே கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்கள்.
திமுக இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் சுழலில், அதிமுக.வில் இருந்தும் ஜெயலலிதாவுக்காக குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் இன்று தனது முகநூல் பக்கத்தில், ‘பாரத ரத்னா குறித்து இன்றைய செய்தித்தாள்களில் நிறைய எழுதியிருக்கிறார்கள். அம்மா (ஜெயலலிதா)வின் மரணத்திற்கு பிறகு 2016-ம் ஆண்டு டிசம்பர் 29-ம் தேதி கூடிய அதிமுக பொதுக்குழுவில் அம்மாவுக்கு பாரத ரத்னா வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம்.
தமிழ்நாடு அமைச்சரவையும் கூடி அந்த உயரிய விருதை அம்மாவுக்கு வழங்க தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறது. 2017 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதிமுக எம்.பி.க்கள் அந்தக் கோரிக்கையை முன்வைத்து பேசினார்கள்.
அம்மா இறந்து 600 நாட்களுக்கும் மேலாகிவிட்டது. அதிமுக தொண்டர்கள், அம்மா விசுவாசிகள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் இதில் மத்திய அரசின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள்’ என குறிப்பிட்டிருக்கிறார் மைத்ரேயன்.
வழக்கமாக தனது முகநூல் பக்கத்தில் தமிழில் பதிவிடும் மைத்ரேயன், டெல்லியின் கவனத்தை எட்டும்விதமாகவே ஆங்கிலத்தில் பதிவு செய்திருக்கிறார். கருணாநிதிக்கு வழங்க முடிவெடுத்தால், அதற்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு வழங்க வேண்டும் என்கிற தொனி மைத்ரேயனின் பதிவில் தென்படுகிறது.
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் கூறுகையில், ‘கருணாநிதிக்கு டெல்லி ஆட்சியாளர்கள் கொடுக்கும் முக்கியத்துவம் நிஜமாகவே அதிமுக வட்டாரத்திற்கு கலக்கத்தை கொடுத்திருக்கிறது. குறிப்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் முதல்வர் ஒருவரை ஜனாதிபதி நேரில் சென்று சந்தித்ததாக இதற்கு முன்பு மரபே இல்லை. அதை தகர்த்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தபோதே டெல்லி ஆட்சியாளர்கள் திமுக மீது சாஃப்ட் கார்னராக இருப்பது புரிந்தது.
ஜனாதிபதி மட்டுமல்ல, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு என வரிசையாக முடிந்த அளவுக்கு விஐபி-க்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
கருணாநிதியின் இறுதி அஞ்சலிக்கு பிரதமர் மோடியே வந்தார். ஆனால் கருணாநிதியால் ஜனாதிபதி ஆக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களான பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் இறுதி அஞ்சலிக்குகூட வராததும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
கருணாநிதி மறைவுக்கு பிறகு முந்தைய மரபுகளை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. ஒரு நாள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டது. இவை எல்லாம் நிஜமாக திமுக.வை விழி விரிய வைத்துவிட்டது. இதேபோல கருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்கவும் மத்திய அரசு பரிசீலிக்க வாய்ப்பு இருப்பதாக அதிமுக தலைவர்களுக்கு தகவல் வந்து சேர்ந்திருக்கிறது.
டெல்லியில் பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் இருந்து, ராஜ்யசபை துணைத்தலைவர் தேர்தல் வரை அதிமுக.வின் 50 எம்.பி.க்களும் பாஜக.வுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்தச் சூழலில் ஜெயலலிதாவை தவிர்த்துவிட்டு கருணாநிதிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டால், அதிமுக எம்.பி.க்களுக்கு அவமானமாகிப் போகும். எனவேதான் இந்தத் தருணத்தில் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்கக் கோரி தாங்கள் வைத்த கோரிக்கை 600 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் இருப்பதை டெல்லிக்கு சுட்டிக் காட்டியிருக்கிறார் மைத்ரேயன்’ என்கிறார்கள் அவர்கள்!
திமுக தரப்பிலோ, ‘ஜெயலலிதா சார்ந்த சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு தீர்ப்பில் ஜெயலலிதாவை குற்றவாளியாகவே கூறப்பட்டிருக்கிறது. எனவே அவருக்கு வழங்கும் வாய்ப்பு இல்லை. திமுக தரப்பில் தேசிய அளவில் எல்லாக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தொடர்ந்து கலைஞருக்கு பாரத ரத்னா கிடைக்கு போராடுவோம்’ என்கிறார்கள்.
பாரத ரத்னா விருது பரிந்துரைக்கு என குழு இருந்தாலும், நடைமுறையில் பிரதமர் பரிந்துரைத்து ஜனாதிபதியால் வழங்கப்படுவதுதான் இந்த விருது! நரேந்திர மோடி பிரதமர் ஆன பிறகு வேதியலாளர் சி.என்.ராவ், பனாரஸ் இந்து பல்கலைக்கழக நிறுவனரான மதன் மோகன் மாளவியா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டிருக்கிறது.
2015-க்கு பிறகு யாருக்கும் பாரத ரத்னா வழங்கப்பட வில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 20 ஆண்டுகளாக பாரத ரத்னா யாருக்கும் கிடைக்கவில்லை. கருணாநிதிக்கு கிடைக்குமா? கருணாநிதி-ஜெயலலிதா போட்டியில் இருவருக்குமே இல்லாமல் போகுமா? என்பது தெரியவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.