‘செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் தான் போதிக்கிறான்’ என கட்சி தொடங்கியுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி, ‘மக்கள் நீதி மய்யம்’ என கட்சியின் பெயரையும் அறிவித்தார் கமல்ஹாசன். அவரின் புதுக்கட்சிக்கு, பல்வேறு இடங்களில் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜாவும் அறிஞர் பெர்னாட்ஷாவின் வரிகளை மேற்கோள் காட்டி கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் இனிய நண்பர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு, அன்புடன் பாரதிராஜா எழுதுகிறேன்!
‘அறிவாளியாய் இருப்பதைவிட புத்திசாலியாக இருக்கிறவன் தான் ஜெயிக்கிறான்’ என்ற தத்துவம் வாழ்க்கைக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் அப்படியே பொருந்தும். தமிழ்நாடு இன்று சாதி, மதம், இனம் என்ற வேற்றுமைகளால் உடைக்கப்பட்டு கிடக்கிறது. இது அத்தனையும் ஒரே அணியில் கூட்டிச் சேர்ப்பது பெரும்பாடு.
கரை வேட்டி கட்டி, கட்சிக்கொடி பிடித்து, மேடை போட்டு மைக் பிடித்துப் பேசுவது மட்டும்தான் மக்களுக்கான அரசியல் பிரச்சாரம் அல்ல. திரைப்படத்தின் மூலமும் சமூக, அரசியல் கருத்துகளைச் சொல்லலாம்.
‘என் திரைப்படங்களை சென்சார் செய்யாமல் வெளியிட அனுமதித்தால், ஒரே ஆண்டில் தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறேன்’ என்றாராம் அறிஞர் அண்ணா.
கமல்ஹாசனும் தன் திரைப்படங்கள் மூலம் சமூகக் கருத்துகளை மக்களிடம் விதைத்தவர் தான். தன் நற்பணி மன்றத்தின் மூலம் மக்கள் பணியாற்றியவர் தான். இரத்த தானத்தில் இருந்து தன் உடலையே தானம் செய்தவர் கமல். அவர் அரசியலுக்கு வரவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு இதுபோன்ற நற்பணிகளைச் செய்தவரல்ல. உண்மையான தொண்டுள்ளம் கொண்ட காரணத்தினால்தான் செய்தார். ஓர் தலைவனுக்கான முழுத் தகுதியும் உடையவர் நம்மவர் கமல்.
இன்று அரசியல், தமிழர்களின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, போராட்டம் ஆகியவற்றோடு பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. மக்கள் புரட்சியினால் மட்டும்தான் மாற்றம் கொண்டுவர முடியும். உங்கள் மக்கள் நீதி மையத்தின் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
‘செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் தான் போதிக்கிறான்’ என்று சொல்வார் பெர்னாட்ஷா. கமல்... நீங்கள் செய்ய முடிந்தவர். திரையில் தெரிந்த உங்கள் ‘தசாவதாரம்’, அரசியலில் ‘விஸ்வரூபமாய்’ வெற்றிபெற வாழ்த்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.