சென்னை இதற்கு முன்பு இப்படியொரு போராட்டத்தை சந்தித்ததா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு மாநகரமே குலுங்கும் விதமாக ஜேக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம் சென்னையை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்தது.
தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான ‘ஜேக்டோ’வும், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ‘ஜியோ’வும் இணைந்து சில கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன்வைத்தன. குறிப்பாக, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை 1-4-2003 முதல் அமல்படுத்த வேண்டும்; 6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவதுடன், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும்; ஊதிய மாற்றத்தை ஏற்படுத்தும் வரை 1-1-2016 முதல் முன் தேதியிட்டு 20 சதவிகிதம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும் ஆகியன அவர்களின் முக்கிய கோரிக்கைகள்!
இந்த 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 5-ம் தேதி (நேற்று) தமிழகம் முழுவதும் இருந்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் சென்னையில் திரண்டனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே கூடிய இவர்கள் அங்கிருந்து கோட்டை நோக்கி பேரணியாக செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் பேரணிக்கு போலீஸ் அனுமதி கொடுக்காததால் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2017/08/IMG_0233.jpg)
இதையொட்டி, நேற்று காலையிலேயே சேப்பாக்கம், வாலஜா சாலையில் நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் இருந்து சாரை சாரையாக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் சேப்பாக்கத்தில் வந்து குவிந்தனர். அதனால் அந்த ஏரியாவே மனிதக் கடல் போல காட்சியளித்தது. வங்கக் கடல், மெரினா கடற்கரையை தாண்டி சேப்பாக்கத்தில் புகுந்ததாக இந்தக் காட்சியை போராட்டக் குழுத் தலைவர்கள் வர்ணித்தனர்.
இந்தப் போராட்டத்தையொட்டி சென்னையின் பிரதான சாலைகளான அண்ணா சாலை, கடற்கரை சாலை உள்ளிட்ட பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது, திடீரென சென்னை முழுக்க பலத்த மழையும் பெய்ததால், வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நின்றன.
இந்தப் போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்து கலைந்தார்கள். (போராட்டக் காட்சிகள், படங்களாக)