எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு நிகராக எடப்பாடி பழனிசாமிக்கும் கட் அவுட்கள் வைத்து கடலூரில் அரசு விழா நடந்திருப்பது பரபரப்பாக பேசப்படுகிறது.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழா கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்த வரிசையில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேசியதாவது..
‘கடலூர் மாநாட்டின் மூலம் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கியது. கடலூர் மாவட்ட பெண்கள் வீரமும் விசுவாசமும் மிக்கவர்கள். ஒரு நடிகரும் தலைவரும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர் எம்.ஜி.ஆர். சமூக விழிப்புணர்வு பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இன்றைய இளைஞர்களுக்கும் நாளைய இளைஞர்களுக்கும் படிப்பினையாக திகழ்ந்தவர். இளைஞர்களை நம்பித்தான் நாடு இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.
கடலூர் மாவட்ட மக்கள் இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு வாழ்கிறார்கள். இளைஞர்கள் இயற்கை பேரிடர் ஏற்பட்ட போதெல்லாம் சிறப்பாக அதை எதிர்கொண்டார்கள். ஜெயலிதாவின் வழியில் ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்தும் தகுதி தொண்டர்களுக்கு மட்டும்தான் உள்ளது. ஆணவம் மிக்கவர்கள் இயற்கையின் முன் ஒன்றும் இல்லாமல் போய்விடுவார்கள்.
கடலூர் விழாவில்...
தமிழகத்தில் கல்வித்தரம் உயர்ந்திருக்கிறது. உயர்கல்வி படிக்கும் மணவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பெரியவர் சிறியவர் என்று பார்க்காமல் இணக்கமாக வாழ வேண்டும். நான் என்கிற மமதையுடன் செயல்படுபவர்கள் இடம்தெரியாமல் போய்விடுவார்கள்.’
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் கார் மூலமாக வெளியூர் பயணங்கள் சென்றால் வழிநெடுக கட்சிக்காரர்கள் மூலமாக வரவேற்பு கொடுப்பது வழக்கம். அதே பாணியில் எடப்பாடி பழனிசாமிக்கும் சமீபகாலமாக வரவேற்புகள் கொடுக்கப்படுகின்றன. நேற்றும் கடலூர் செல்லும் வழியில் கட்சிக்காரர்களுடன் சந்திப்பு, மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து வழங்குதல் என நிகழ்ச்சிகளை அமைத்தார் எடப்பாடி.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் முந்தைய கூட்டங்களில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் மட்டுமே பிரமாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டன. எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயர கட் அவுட்களை சில இடங்களில் மட்டுமே பார்க்க முடிந்தது. ஆனால் கடலூர் பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் தலா 50 அடி உயர கட் அவுட் வைத்துவிட்டு, அவற்றின் அருகிலேயே 49 அடி கட் அவுட் வைத்திருந்தது பலரையும் புருவம் உயர்த்த வைத்தது.
அ.தி.மு.க.வில் ஒவ்வொரு அணியும் தங்கள் பலத்தை காட்டத் தயாராகி வரும் சூழலில், எடப்பாடி தன்னை தனிப்பெருந் தலைவராக காட்ட எடுத்த நடவடிக்கையாக இதை குறிப்பிடுகிறார்கள். மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரன் பெரும் கூட்டத்தை திரட்டிக் காட்டியதால், எடப்பாடிக்கும் கடந்த கூட்டங்களைவிட கணிசமான கூட்டத்தை கடலூரில் திரட்டியிருந்தனர்.