சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (டிச.24) காலை சரியாக 8 மணியளவில் தொடங்கியது. 14 மேஜைகளில் மொத்தம் 19 சுற்றுகளாக இந்த வாக்கு எண்ணிக்கை நடத்தப்படுகிறது. சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சுற்றின் முடிவில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 5,339 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 2,738 வாக்குகளும், திமுக வேட்பாளர் மருது கணேஷ் 1182 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 2-வது சுற்றிலும் டிடிவி தினகரன் 10,421 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். மதுசூதனன் 4,521 வாக்குகள் பெற்றுள்ளார். மருதுகணேஷ் 2,383 வாக்குகள் பெற்றுள்ளார்.
இரண்டாவது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்த போது, திடீரென அதிமுக முகவர்களுக்கும், தினகரன் முகவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. நாற்காலிகளை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள் பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். சில தேர்தல் அலுவலர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனால் வாக்குகள் எண்ணிக்கை சுமார் 45 நிமிடங்கள் தடைப்பட்டது. பின்னர், போலீசாருடன் துணை ராணுவப் படையினரும் வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.