கலாச்சார சீர்கேடை உருவாக்கும் பிக்பாஸ் : பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் தாக்கு

அது கலாச்சார சீர்கேடை உருவாக்குவதாகவே பார்த்த அனைவரும் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சி தேவையா?

கலாச்சார சீர்கேடை பிக்பாஸ் உருவாக்குவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.

மொத்த தொலைக்காட்சி பார்வையாளர்களையும் ‘பிக்பாஸ்’ கட்டிப் போட்டிருக்கிறது. ‘ரியாலிட்டி ஷோ’ என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆனால் சுவாரசியமான திட்டமிட்ட திரைக்கதையாகவே இதன் நகர்வுகள் காட்சி தருகின்றன. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக அமைந்ததும், இதையொட்டி அவர் அரசியல் சரவெடிகளை கொளுத்திப் போட்டு தனது ‘மார்க்கெட்டை’ ஏற்றிக்கொண்டதும் இந்த நிகழ்ச்சிக்கு பிளஸ்!

ஆரம்பத்தில் இருந்தே இந்த நிகழ்ச்சிக்கு எதிராக பல்வேறு முனைகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதில் கலந்துகொண்ட நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம், ‘சேரி பிகேவியர்’ என குறிப்பிட்டது, தலித் செயல்பாட்டாளர்களை கோபப்படுத்தியது. சிலர் இது தொடர்பாக வழக்கறிஞர் நோட்டீஸும் அனுப்பியுள்ளனர்.

அடுத்து, தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னைகளுக்காக நெடுவாசல், கதிராமங்கலம் என போராட்டம் வெடித்துக்கொண்டிருக்கும் சூழலில் அதை மட்டுப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைவதாக போராட்டக்காரர்கள் வெடித்தனர். இதேபோல இந்து அமைப்பினரும், பா.ஜ.க.வின் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் இதை கலாச்சார சீர்கேடாக வர்ணித்தனர்.

அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘பழைய முத்தக் காட்சிகளை விடவா இது கலாச்சாரத்தை கெடுத்துவிடப் போகிறது?’ என கேள்வி எழுப்பினார். ‘கமல், முதுகெலுப்பு இல்லாதவர்’ என வர்ணித்த ஹெச்.ராஜாவை, ‘எலும்பு மருத்துவர்’ என நகைச்சுவையாக கலாய்த்தார் கமல்.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதில் அவ்வளவாக கருத்து சொல்லாமல் ஒதுங்கியிருந்தார். காரணம், நேரம் கிடைக்கிறபோது ரஜினி, கமல் உள்ளிட்டவர்களை சந்தித்து தனிப்பட்ட நட்பை பேணக்கூடியவர் அவர். ஆனால் அவரும் முதல்முறையாக ‘பிக்பாஸ்’ பற்றி கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இன்று (ஆகஸ்ட் 7) கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு தங்கத்தேர் செய்யும் பணியை தொடங்கி வைத்த பொன்னாரிடம், பிக்பாஸ் பற்றி நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘அது கலாச்சார சீர்கேடை உருவாக்குவதாகவே பார்த்த அனைவரும் கூறுகிறார்கள். இந்த நிகழ்ச்சி தேவையா?’ என கேள்வி எழுப்பினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் காயத்ரி ரகுராம், பா.ஜ.க. நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது கட்சி நடவடிக்கை எடுக்குமா? என்பது தெரியவில்லை.

×Close
×Close