பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்ட சர்ச்சை: நடிகர் கமல்ஹாசன் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு!

சேரி வாழ் மக்கள் குறித்து இழிவாக பேசிய காயத்ரி ரகுராமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து நடிகர் கமல்ஹாசனின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது. நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக நேற்று கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் புகார் அளித்தனர்.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், தனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றும், சட்டம் தன்னை பாதுகாக்கும் என்றும் கூறியிருந்தார்.

இதனிடையே இன்று கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அவர்கள் கூறும்போது: கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தின் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் உள்ளது. தமிழகர்களின் உணர்வுகளை மதிக்காமல் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழுவதும் இந்து சிவசேனா, இந்து மக்கள் கட்சி இணைந்து போராட்டங்களை நடத்துவோம். மேலும், கமல்ஹாசன் திரைப்படத்தை வெளியிடும் தியேட்டர்களை அடித்து நொருக்குவோம். கமல்ஹாசனுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.
இதனால், கமல்ஹாசன் வீட்டைச் சுற்றி 24 மணிநேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோல, பிக்பாஸ் நிகழ்ச்சின் போது காயத்ரி ரகுராம் பேசிய வார்த்தை சர்ச்சைக்குள்ளாது. சேரி வாழ் மக்கள் குறித்து இழிவாக பேசிய காயத்ரி ரகுராமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையகரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் இந்த புகாரை அளித்துள்ளனர்.

Gayathri raguram

காயத்ரி ரகுராமின் வார்த்தைகள் யாரையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருந்தால் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக அவரது தாயார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக காயத்ரியின் தாயர் கிரிஜா ரகுராம் கூறும்போது: இந்த விஷயத்தை ஏன் பெரிது படுத்துகின்றனர் என தெரியவில்லை. ஒரு பெண் இவ்வாறு கூறியதால் இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கின்றனரா? அல்லது அவர்கள் பாஜக-வில் இருக்கின்றனர் என்பதால் இவ்வாறு செயல்படுகின்றனரா? என்பது தெரியவில்லை. ஒரு பெண்ணை இவ்வாறு கேவலமாக பேசும்போது, ஒரு தாய் என்ற வகையில் இதனை கேட்கும் போது வருத்தமாக உள்ளது. தயவு செய்த ஒரு பெண்ணை இவ்வளவு கேவலமாக பேசவேண்டாம். அவர் தெரியாமல் பேசியிருக்கலாம். அதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறினார்.

×Close
×Close