‘கைக்கூலி அரசு கையில் இருக்கும் துணிவில் விசிக-வினரை தாக்குவதா?’ பாஜக-வுக்கு சீமான் கண்டனம்

‘கைக்கூலி அரசு கையில் இருக்கும் துணிவில் விசிக-வினரை தாக்குவதா?’ என பாஜக-வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

By: October 28, 2017, 4:51:45 PM

‘கைக்கூலி அரசு கையில் இருக்கும் துணிவில் விசிக-வினரை தாக்குவதா?’ என பாஜக-வுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு : விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனைப் பற்றியும், அக்கட்சியினைப் பற்றியும் அரசியல் நாகரீகம் அற்ற விமர்சனங்களை முன் வைத்ததோடு மட்டுமில்லாமல் , அந்த விமர்சனங்களுக்குச் சனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பினைக் காட்ட முனைகிற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அரசியல் தளங்களில் தனிப்பட்ட முறைமைகளில், சாதி,மத அடையாளங்களை முன் வைத்து அரசியல் கருத்துக்களை அணுகுவதும், எதிர்வினையாற்றுவதும் சனநாயக மாண்புகளுக்கு எதிரானது. மதிப்பு மிகு ஒரு தலைவரை தரம் குறைந்த சொற்களால் பாஜகவின் தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் விமர்சித்தது பாஜகவின் சகிப்பற்றத் தன்மையை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது.

தங்கள் கருத்துகளுக்கு எதிராக வருகிற கருத்துக்களை,விமர்சனங்களைச் சகித்துக்க்கொண்டு, அவற்றில் உள்ள நியாயங்களைக் காணாமல் ஆட்சியதிகாரம் தந்திருக்கிற ஆணவத்தால் மாற்றுக் கருத்து உடையவரை தனிப்பட்ட முறைமையில் மத ரீதியாக விமர்சிப்பதும், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்துவதும் பாஜக ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது.

இதற்கெல்லாம் மேலாக ஒரு கட்சியின் மதிப்பு வாய்ந்த தலைவரை இழிவான சொற்களைக் கொண்டு விமர்சித்துப் பேசியது கண்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தி வரும் விசிக கட்சியினரை கரூர்,மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் முடிந்து அவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும், காவல் துறை வாகனத்திலேயே அவர்களைத் தாக்கி தங்களது எதேச்சதிகார மனநிலையைத் தக்க வைக்க முயலும் பாஜக கட்சியினரை சனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

கருத்துக்களைக் கருத்துகளால் எதிர்க்கொள்ளத் திறனற்று.. மெர்சல் படம் தொடர்பாகத் தம்பி நடிகர் விஜய் மத ரீதியாக விமர்சிக்கப்பட்டதும், தற்போது விசிக தலைவர் அண்ணன் திருமாவளவன் தரம் குறைந்த வார்த்தைகளால் பாஜகவின் பொறுப்பாளர்களால் விமர்சிக்கப்படுவதும், விசிக கட்சியினர் தாக்கப்படுவதும் காட்டாட்சி நடத்தும் பாஜகவிற்கு வெகு சாதாரண ஒன்றாக இருக்கலாம்.

ஆனால் ஒவ்வொரு வினைக்கும், அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்கிற இயங்கியல் விதிக்கேற்ப இது போன்ற சர்வாதிகார மனநிலையும், வன்முறை தாக்குதல்களும் இம்மண்ணில் கடுமையான எதிர்ப்பினைப் பெற்று பாஜகவின் பூரண அழிவிற்கு அடித்தளமாக விளங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இச்செயல்கள் சனநாயகத்தின் மீதும், கருத்துரிமைகளின் மீதும் நடத்தப்படுகிற தாக்குதல்களாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது.

ஆளுநரை வைத்தும், பிரதமரைக் கொண்டும் தமிழகத்தை ஆளும் கட்சிக்குள் எழும் வேறுபாடுகளைக் கட்டப்பஞ்சாயத்துச் செய்து வரும் பாஜக ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்காகப் போராடிவரும் அண்ணன் திருமாவளவளவனைக் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார் என்று விமர்சிப்பது அர்த்தமற்ற வெற்றுக் கூச்சல் என்றே நான் கருதுகிறேன்.

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதும், உரிமைக்குரல் எழுப்புவதும் கட்டப் பஞ்சாயத்து என்றால்.. ஆளுநரை வைத்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் கரங்களை இணைத்து பஞ்சாயத்து செய்த பாஜகவின் செயலுக்கு என்ன பெயர் என்பதை அறிவார்ந்த மக்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன். கைக்கூலி அரசாகத் தமிழக அரசு தங்கள் கரங்களில் இருக்கும் துணிவில் எதையும் இம்மண்ணில் நடத்தி விடலாம் என நினைக்கிற பாஜகவின் கனவு இம்மண்ணின் மைந்தர்களாகிய நாங்கள் உயிருடன் இருக்கும் வரை பலிக்காது.

விசிகவைச் சேர்ந்த உறவுகளைத் தொடர்ச்சியாகத் தாக்கி வரும் பாஜக ரவுடிகள் மீது தமிழக அரசு உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். விசிக உறவுகள் பாஜகவினரால் தொடர்ச்சியாகத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் பட்சத்தில் அதற்கு எதிராக நாம் தமிழர் கட்சி சனநாயக சக்திகளைத் திரட்டி மிகப்பெரிய போராட்டக் களத்தை அமைக்கும் எனவும் இதன் மூலம் உறுதியாகத் தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Bjp attack on vck seeman condemns

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X