மோடியா, லேடியா? என ஜெயலலிதா சவால் விட்டதால், அ.தி.மு.க.வை மூன்றாக பா.ஜ.க. பிளந்திருப்பதாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ மூலமாக அட்டாக் நடத்தியிருக்கிறது டி.டி.வி. தரப்பு!
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு சசிகலாவுக்கு எதிராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கினார். அதன் பின்னணியில் பா.ஜ.க. மேலிடம் இருந்ததாக அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. அதன்பிறகு சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் சிறைக்கு சென்றதும், எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலுடன் இயங்க ஆரம்பித்த அ.தி.மு.க. அம்மா அணியும் முழுக்க டெல்லியின் கண் அசைவுகளுக்கு கட்டுப்பட ஆரம்பித்துவிட்டது.
சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.வி.தினகரன் மறுபடியும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிகள் எடுக்கவும், பிரச்னை உக்கிரமாகியிருக்கிறது. ‘டி.டி.வி.தினகரனை துணைப் பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்ததே செல்லாது’ என கடந்த 10-ம் தேதி அதிரடியாக எடப்பாடி தரப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
இதை ஏற்க மறுக்கும் டி.டி.வி.தினகரன், ‘கட்சிக்கு விரோதமாக நடந்தால், எடப்பாடி உள்பட யாரையும் கட்சியை விட்டு நீக்கத் தயங்கமாட்டேன்’ என கூறி வருகிறார். வருகிற 14-ம் தேதி தனது முதல் பிரசாரக் கூட்டத்தை மதுரை மேலூரில் தொடங்க இருக்கும் டி.டி.வி.தினகரன், அதற்கு ஆட்சியாளர்கள் அனுமதி கொடுக்க வாய்ப்பில்லை என தெரிந்து நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்றிருக்கிறார்.
எடப்பாடி அணியும், ஓ.பி.எஸ். அணியும் முழுக்க டெல்லி புகழ் பாடிவரும் சூழலில், அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழான ‘நமது எம்.ஜி.ஆர்.’ மட்டும் அவ்வப்போது டி.டி.வி.தினகரனின் குரலாக பா.ஜ.க. மீது அட்டாக் நடத்தி வருகிறது. தவிர, இரு வாரங்களுக்கு முன்பு இரு தினங்கள் மட்டும் தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் தமிழக அமைச்சர்கள் தொடர்பான செய்திகளையே நமது எம்.ஜி.ஆர். புறக்கணித்தது.
அதன்பிறகு கடந்த 10-ம் தேதி முதல் எடப்பாடி-டி.வி.வி. தரப்பு இடையே யுத்தம் மூண்டிருக்கும் சூழலில் மறுபடியும் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் தொடர்பான செய்திகளை முழுமையாக புறக்கணித்து வருகிறது நமது எம்.ஜி.ஆர். எடப்பாடி தரப்புக்கு எதிராக டி.டி.வி.தினகரனும், அவரது ஆதரவாளர்களும் வழங்கிய பேட்டிகளை பிரதான செய்திகளாக வெளியிட்டு வருகிறது.
இதில் அடுத்த அதிரடியாக ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழில், ‘காவி அடி... கழகத்தை அழி..!’ என தலைப்பிட்டு பா.ஜ.க.வை கடுமையாக தாக்கி கவிதை வெளியிடப்பட்டிருக்கிறது. உத்தரகாண்ட், அருணாசலப்பிரதேசம், கோவா, பீகார், டெல்லி, புதுவை, மணிப்பூர் என ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்கட்சிகளுக்கு எதிராக அதிகாரத்தை பயன்படுத்தி பா.ஜ.க. அடாவடி அரசியல் செய்வதாக விமர்சிக்கிறது அந்தக் கவிதை.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அரசியல் சாசன அமைப்புகளை ஆயுதமாக்கி அரசியல் படுகொலைகளை பா.ஜ.க. அரங்கேற்றுவதாக கூறும் அந்தக் கவிதையின் அடுத்த சில வரிகள் இப்படி போகின்றன...
‘அமெரிக்க டாலர் மதிப்பை 35 ரூபாய்க்குள் அடக்குவோம், பெட்ரோல் டீசல் விலையை பாதியாக குறைப்போம் என்றெல்லாம் வகை வகையாக வாயால் வடை சுட்டவர்கள்... விளைநிலங்களை வெடிகுண்டு கிட்டங்கிகளாக்கி விவசாயி வயிற்றில் அடிப்பவர்கள்... வாக்களித்த மக்களை ‘வரி’ குதிரை ஆக்கியவர்கள்... கரன்சியை வெற்றுக் காகிதமாக்கி கருப்பு பணம் ஒழித்தோம் என கதையளப்பவர்கள்...
இவர்கள் முன்னின்று நடத்தியதெல்லாம் மோசடிகளும் கூடவே மோடியா? இந்த லேடியா? என சவால் விட்ட இயக்கத்தை மூன்றாக பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல்கள் தந்ததும்தானே!’ என முடிகிறது கவிதை. அ.தி.மு.க. தரப்பிலிருந்து நேரடியாக பா.ஜ.க. மீது வீசப்பட்டிருக்கும் முதல் பெரிய விமர்சன அம்பு, இந்தக் கவிதைதான்!
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகளை மட்டுமல்லாமல், பா.ஜ.க.வுக்கு எதிராகவும் டி.டி.வி.தினகரன் வேகம் காட்ட ஆரம்பித்திருப்பதையே இந்தக் கவிதை உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.