‘மெர்சல்’ விவகாரம் : கமல்ஹாசனை மறக்கடிக்க காய் நகர்த்துகிறதா பாஜக?

தொடர்ந்து ‘மெர்சல்’ பற்றியும், விஜய் பற்றியும் பேசிக் கொண்டிருந்தால், கமல்ஹாசனை கொஞ்ச நாளைக்கு மக்கள் மத்தியில் இருந்து மறக்கடிக்க வைக்கலாம் என பாஜக கணக்கு போட்டுள்ளது.

By: October 21, 2017, 5:17:41 PM

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பிழப்பு தொடர்பான காட்சிகள், பாஜகவினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. ‘அந்தக் காட்சிகளை நீக்காவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடருவோம்’ என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மிரட்டல் விடுக்க, ‘இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயல்’ என மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும், சினிமா பிரபலங்களும் எதிர்க்குரல் கொடுத்துள்ளனர்.

எதுவுமே இல்லாத இந்த சின்ன விஷயத்திற்கு பாஜக ஏன் இவ்வளவு கூப்பாடு போடுகிறது? என்ற கேள்விக்கு, ‘எல்லாம் கமலை மறக்கடிக்க வைக்க பாஜகவினர் காய் நகர்த்தும் செயல்தான் இது’ என்று காதைக்  கடிக்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

ஜெயலலிதா இருந்தவரை, வேறு யாரும் புதிதாக அரசியலில் தலையெடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதிலும், சினிமாவில் இருந்து யாருமே வந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதனால்தான் ‘தலைவா’ மற்றும் ‘கத்தி’ படங்களில் விஜய்க்கும், ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுக்கும் பிரச்னை ஏற்பட்டது. ஜெயலலிதா இறந்தபிறகு, தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

அந்த வெற்றிடத்தைக் கைப்பற்ற, பல்வேறு ஆட்கள் துடிக்கின்றனர். அதில், பாஜவும் ஒன்று. இதுவரை தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளைத் தவிர தேசியக் கட்சிகளுக்கு மதிப்பே கிடையாது. அதுவும் தேசியக் கட்சியான பாஜவுக்கு தமிழகத்தில் கொஞ்சம்கூட ஆதரவு இல்லை. எனவே, மோடியின் ஆட்சிக்காலம் முடிவதற்குள், தமிழகத்தில் தாமரையை மலரவைத்து விடலாம் என்று பாஜகவினர் துடித்து வருகின்றனர்.

எவ்வளவுதான் பாஜகவுக்கு அதிகாரம் இருந்தாலும், மக்கள் மனதில் இடம்பிடிப்பது அந்தக் கட்சிக்கு சாத்தியமில்லை. எனவே, மக்களிடம் செல்வாக்கு மிகுந்த ரஜினியைத் தன்னுடைய முகமாக நிறுத்த முடிவு செய்தது பாஜக. ஆனால், ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்று சொல்லி விலகியிருக்கிறார் ரஜினி. அவருக்கு அடுத்து கமல். ஆனால், அவரோ மத்திய, மாநில அரசுகளைக் கண்மூடித்தனமாக விமர்சிப்பவர். எனவே, அவரிடம் பேசக்கூட முடியாது.

வேறு யாரை நிறுத்தலாம் என பாஜக யோசித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென கமல்ஹாசன் அரசியலில் என்ட்ரியாக இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், பாஜகவினருக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அதுவும், நவம்பர் 3ஆம் தேதி அவருடைய பிறந்த நாளன்று தனிக்கட்சி தொடங்குவது உறுதி என்ற நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்திருப்பதால், ஆடிப் போயிருக்கிறது பாஜக.

போட்டிக்கு யாருமில்லாமல் ஒற்றை ஆளாக வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக நினைத்துக் கொண்டிருக்கும்போது, மக்களிடம் ஏகோபித்த ஆதரவுபெற்ற கமல் போட்டிக்கு வருகிறார் என்றால்..? கமல்ஹாசனை முளையிலேயே கிள்ளி எறியத் துடிக்கின்றன பாஜகவும், அது ஆட்டுவிக்கும் அதிமுகவும்.

கமல்ஹாசனுக்கு இருக்கிற நல்ல பேரைக் கெடுப்பதுதான் அவர்களின் முதல் டாஸ்க். அதனால்தான், நிலவேம்பு விஷயத்தில் கமல்ஹாசன் சொன்னது, மிகப்பெரிய பிரச்னையாக ஊதி பெரிசாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாஜகவினர் கையிலெடுத்த விஷயம்தான் ‘மெர்சல்’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

பாஜகவினர் கூறிய காட்சிகளை நீக்கிவிடுவதாக தயாரிப்பாளர் முரளி பொன்.ராதாகிருஷ்ணனிடம் போனில் உறுதியளித்த பிறகும்கூட இந்தப் பிரச்னை தொடர்கிறது என்றால், அதன் பின்னணியில் இருப்பது கமலை மறக்கடிக்க வைக்கும் செயல்தான் என்கிறார்கள். சாதாரண பிரச்னைக்கு, ‘ஜோசஃப் விஜய்’ என்று ஹெச்.ராஜா மதத்தை இழுத்திருப்பது, இப்போது இந்தப் பிரச்னையை விடக்கூடாது என்பதையே காட்டுகிறது.

தொடர்ந்து ‘மெர்சல்’ பற்றியும், விஜய் பற்றியும் பேசிக் கொண்டிருந்தால், கமல்ஹாசனை கொஞ்ச நாளைக்கு மக்கள் மத்தியில் இருந்து மறக்கடிக்க வைக்கலாம் என பாஜக கணக்கு போட்டுள்ளது.

ஆனால், தினமும் பிரேக்கிங் நியூஸ் தேவைப்படும் தமிழ்நாடு இது. நாளைக்கே வெறொரு பிரச்னை வந்தால், ‘மெர்சல்’ படத்தை மறந்துவிட்டு அந்தப் பிரச்னைக்கு மீடியாக்களும், மக்களும் திரும்பி விடுவார்கள் என்பது பாஜகவினருக்குத் தெரியுமா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Bjp crated mersal issue for kamal haasan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X