சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் 4 சுற்றுகள் முடிவில், டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனன் 9,672 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் மருதுகணேஷ் 5,091 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த முன்னிலை குறித்து பேட்டியளித்த தினகரன், "வேட்பாளரை வைத்தே சின்னம் நிர்ணயிக்கப்படுகிறது. சின்னம் யாரிடம் இருக்கிறது, கட்சியின் பெயர் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல. மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதே முக்கியம். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக ஆர்.கே.நகரில் யார் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும் என அப்பகுதி மக்கள் முடிவு செய்துவிட்டனர்" என்றார்.
இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டரில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதா மரணத்தால் தினகரன் வெற்றிப் பெறுவார் என தெரிகிறது. 2019ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் இணையும் என நான் எதிர்பார்க்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாகவே, ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு, மத்தியில் ஆளும் பாஜக அரசு தான் தமிழக அரசை இயக்கி வருகிறது என தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைக்கு இரட்டை இலையும், அதிமுக பெயரும் மீண்டும் கிடைத்தது. ஆனால், தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் ஆர்.கே.நகர் முடிவுகளை பார்க்கும் பொழுது, அவர்கள் வெற்றிப் பெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதாத குறைக்கு, தினகரனும், "சின்னம் யாரிடம் இருக்கிறது, கட்சியின் பெயர் யாரிடம் இருக்கிறது என்பது முக்கியமல்ல. மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதே முக்கியம்" என கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2019ம் ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் இரண்டு பிரிவுகளும் இணையும் என நான் எதிர்பார்க்கின்றேன் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.