'வருங்கால முதல்வர்' விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: எஸ்.வி.சேகர்

இளையதளபதி…சாரி! ‘தளபதி’ விஜய்க்கு இன்று 43-வது பிறந்தநாள். பல்வேறு பக்கங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஏன்.. பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கூட விஜய்க்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பிறந்தநாள் பரிசாக ‘மெர்சல்’ படத்தின் இரண்டு ஸ்டில்களை வெளியிட்டு, ரசிகர்களை ஏகபோக குஷிக்கு உள்ளாக்கிவிட்டார் இயக்குனர் அட்லீ.

இந்நிலையில், நடிகரும் பாஜகவின் உறுப்பினருமான எஸ்.வி. சேகர், விஜய்யே கொஞ்சம் ‘ஜெர்க்’ ஆகும் அளவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ”கடின உழைப்பின்மூலம் படிப்படியாக முன்னுக்கு வந்த ஒரு நடிகர் என்றால் அது விஜய் தான். இன்று அவரது பிறந்தநாள், அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளையும் என் ஆசீர்வாதங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நல்லவர்கள் அரசியலுக்கு வர வேண்டும், நேர்மையான ஆட்கள் வரணும், மக்களுடைய கஷ்டங்களைத் தெரிஞ்சவங்க வந்தால் போதும். விஜய்யும் அரசியலுக்கு வரக்கூடிய சூழல் இருக்கிறது.

அதை, எப்போது என்பதை விஜய்தான் முடிவுசெய்ய வேண்டும். நல்லவர்கள் யார் வந்தாலும் என் ஆதரவு உண்டு. என்னைப் பொறுத்தவரை, நாடு நல்லா இருக்க, நல்லவங்க வந்தாலே போதும். வருங்கால முதலமைச்சர் விஜய்க்கு என் வாழ்த்துகளை நான் இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தனியார் இணையதளம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

×Close
×Close