மத்திய அரசின் தோல்வியை பாஜக.வை சேர்ந்தவர்களே அம்பலப்படுத்திவிட்டார்கள் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சித் தொண்டர்களுக்கு முரசொலியில் எழுதியிருக்கும் மடலில் கூறியிருப்பதாவது:
வண்ண வண்ண மத்தாப்புகளால் வாணவேடிக்கை காட்டுவது போல, வாக்குறுதிகளை அள்ளி வீசி, பெரும் பொருட்செலவில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் இடைவிடாத பிரசாரம் செய்து, தனிப் பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆட்சி செய்யும் வகையில் வாக்குகளைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்று மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றனவா எனக் கேட்டால் மத்திய ஆட்சியில் இருப்பவர்களால் பதில் சொல்ல முடியாது.
ஆனால், ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்து வரும் தண்டனைகளை, அவர்களைச் சார்ந்தவர்களே வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கியிருப்பதில் இருந்து, மத்திய ஆட்சியின் மூன்றாண்டு கால செயல்பாடுகள் சாதனையா - வேதனையா என்பது அம்பலமாகியுள்ளது. “வளர்ச்சி” என்ற முழக்கத்தை 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் முன்வைத்து, வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மூன்று வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, நாட்டை “வீழ்ச்சி” என்ற பாதைக்குக் கொண்டு போய்விட்டது.
“அடித்தட்டு மக்களும், அன்றாடம் காய்ச்சிகளும் வங்கிக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும், அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ‘ஆதார் எண்’ கட்டாயமாகக் கொடுக்க வேண்டும், ரொக்கமாக பணம் பரிவர்த்தனை செய்வதை கைவிட்டு, டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டும்”, என்று கண்ணை மூடிக்கொண்டு அமல்படுத்தியுள்ள கெடுபிடியான நடவடிக்கைகள் இன்றைக்கு அனைத்துத் தரப்பையும் பாதித்து விட்டது.
“ஆதார் கார்டுகளை கட்டாயமாக்கக்கூடாது”, என்று உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தது. ஆனால், அதையும் மீறி, ‘எதிலும் ஆதார் மயம்’, என்று மக்களை இந்த மூன்று வருட காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு நெருக்கடியில் ஆழ்த்தி இருக்கிறது இந்த அரசு. ஆதார் கார்டுகளின் நம்பகத்தன்மை, தனிமனித பாதுகாப்பு குறித்த நீதிமன்ற வழிகாட்டுதல்கள் அனைத்தையும் புறந்தள்ளி, சர்வாதிகாரமாக செயல்படுகிறது மத்திய அரசு.
பா.ஜ.க.வில் உள்ள சில அறிவு ஜீவிகள் “பண மதிப்பிழப்பு நடவடிக்கை மிகச்சிறந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை”, என்று பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதி, மோடி தலைமையிலான அரசுக்கு முட்டுக் கொடுத்தார்கள். ஆனால், அப்படிப்பட்ட அறிவுஜீவிகள் எல்லாமே இப்போது, “பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது”, என்று மனம் திருந்திய மைந்தர்களாக கருத்துச் சொல்வதை நாம் பார்க்க முடிகிறது.
‘தனி மெஜாரிட்டி’ இருக்கிறது என்ற அதிகார போதையில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இருந்த 8 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகக் குறைத்து விட்டது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. பாதிப்புகள் குறித்து ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்கா சுட்டிக்காட்டியுள்ள பொருளாதார பாதிப்புகள் கடுமையானவை.
சுயவிமர்சனம் என்று சொல்வதுபோல சொந்தக்கட்சியைச் சேர்ந்த ஒருவரே பா.ஜ.க.வின் மூன்றாண்டு கால அரசின் பொருளாதாரச் செயல்பாடுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ள நிலையில், பொருளாதாரத்தைச் சரிசெய்து மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக, கட்டுரை எழுதிய கட்சிக்காரரை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
யஷ்வந்த் சின்ஹா மட்டுமல்ல, பா.ஜ.க.வின் மற்றொரு மூத்த தலைவரும், பொருளாதார நிலவரங்கள் குறித்து அலசுபவருமான டாக்டர் சுப்ரமண்யம் சுவாமி, “ஏற்றுமதியும், இறக்குமதியும் தொடர்ந்துக் குறைந்து கொண்டே வருகிறது. இல்லத்தரசிகளின் சேமிப்பும் குறைந்து விட்டது. மிகப்பெரிய பொருளாதார சீரழிவை நாடு சந்தித்துள்ளது. வங்கிகளும், தொழிற்சாலைகளும் மூடப்படும் என்பதை எல்லாம் விளக்கி, பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு முன்கூட்டியே 16 பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறேன்”, என வெளிப்படையாக அறிவித்துள்ளார். மேலும், “பொருளாதார பேரிடர் உருவாகப் போகிறது”, என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆகவே, எதிர்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விட மிக அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களே முன்வைத்து, பிரதமர் மோடியின் நிர்வாகத்தில் பொருளாதாரம் எப்படி வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்று விளக்கிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியை, அக்கட்சியைச் சார்ந்தவர்களே விமர்சித்து வருகின்ற நிலையில், நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பதை முழுமையாக அறியும்போது அதிர்ச்சியும், வேதனையுமே மிஞ்சுகிறது.
கடந்த 30 ஆண்டுகளில் முழுமையான பெரும்பான்மையுடன் மத்தியில் அமைந்த அரசு என்ற பெருமையைப் பெற்ற நிலையிலும், மோடி அரசு நாட்டின் பொருளாதாரத்தைக் காப்பாற்றாமல், அதனை வீணடித்த சாதனையைத்தான் செய்திருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒருபங்கு அளவில்தான் உலகளாவிய கச்சா எண்ணெய்யின் விலை இருக்கிறது. ஆனால், பெட்ரோல் - டீசல் விலை இரு மடங்காக உயர்ந்துவிட்டது.
ஆட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்ற அதிகார போதையில் செயல்படும் முறையற்ற போக்கினை உடனடியாக கைவிட்டு, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரதமர் நரேந்திர மோடியும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் உடனடியாக ஈடுபட வேண்டும்’. இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.