மாணவி அனிதாவுக்காக தமிழ்நாடு இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பாக, சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் கடந்த வாரம் வியாழக்கிழமை உரிமை ஏந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில், பல இயக்குநர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
அப்போது, இயக்குநர் பா.ரஞ்சித் நிகழ்ச்சியில் பேசியதாவது, “சாதியை ஒழிக்காத வரை தமிழ் தேசியம் காணல் நீர். சமூக நீதியற்ற இந்த சமூகத்தில் எத்தனை நாள் பெரியாரின் பெயரை சொல்லி அரசியல் செய்யப் போகிறோம்? நான் இன்னும் சேரியில் தான் இருக்கிறேன். எங்கள் சேரியில் பெரியாரின் பெயரில் தெருக்கள் உள்ளன. அதேபோல், ஊருக்குள் எத்தனை தெருக்களுக்கு அம்பேத்கரின் பெயர் உள்ளது? சேரிக்குள் நாங்கள் காமராஜர் பெயரை வைத்திருக்கிறோம். சாதியை ஒழிக்காத வரை தமிழ் தேசியம் எட்டாக் கனி என்பதை ஒரு தமிழனாக இருந்து சொல்கிறேன். சாதியால் பிரிந்திருக்கும் வரை, பிரித்து வைக்கப்பட்டிருக்கும் வரை தமிழ் தேசியத்தை நோக்கி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது”, என பேசினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “நாம் சாதி, மதங்களைக் கடந்து தமிழனாக இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்." என்றார்.
இந்த கருத்துக்கு முரண்பட்ட இயக்குநர் ரஞ்சித் அப்போதே மேடையில் ஏறி, “தமிழ், தமிழன் என சொல்லி எத்தனை நாள் ஏமாற்ற போகிறீர்கள், தெருவுக்கு ஒரு ஜாதி இருக்கு. அவ்வளவு ஜாதிகள் உள்ளன. தமிழன் ஜாதியால் பிரிந்திருக்கிறான் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். அனிதா இறந்திருக்கும் இந்த நேரத்திலாவது நம்மை நாமே சுய விமர்சனம் செய்துகொண்டு ஜாதி இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த சாதிய சமூகம் சாதியற்ற சமூகமாக மாற வேண்டும் என்பதே என் விருப்பம்”, என ஆவேசமாக பேசினார்.
இந்தக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டரில், "தன்னை தமிழன் என்று சொல்லாமல் தலித் என்று சொல்லும் ரஞ்சித், தன் ஜாதியைப் பெருமையாகச் சொல்லும் ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்" என்று ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு இயக்குநர் ரஞ்சித், " தலித் என்பது சாதியல்ல, ஆரியம்- சாதியம் ஒழிக்கும் விடுதலைக் கருத்தியல்" என்று பதில் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர், "தம்பி, தலித் என்று சொன்னது நீங்கள்தான். ஆரியம்-சாதியம் ஒழிக்கும் விடுதலை கருத்தியல், நடைமுறை சாத்தியமில்லா கருத்தியல். காலம் உணர்த்தும்" என்றும், "வெற்றி வேகம் தங்களின் பதில். வயதும் அனுபவமும் கூடக்கூட தெளிவு பெறுவீர்கள். என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்" என்றும் ரீட்விட் செய்துள்ளார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை இயக்கிய ரஞ்சித், மீண்டும் சூப்பர் ஸ்டாரின் ‘காலா’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். எனவே ‘என் நண்பர் தங்களின் நாயகன் புரிய வைப்பார்’ என எஸ்.வி.சேகர் குறிப்பிட்டது ரஜினியைத்தான் என புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த விவகாரத்தில் ரஜினியை ஏன் எஸ்.வி.சேகர் இழுத்துவிட்டார்? என்பதுதான் புரியவில்லை. சூப்பர் ஸ்டாருக்கு இது தர்மசங்கடம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.