தமிழகத்தில் அமித்ஷா 3 நாள் சுற்றுப்பயணம் : மீனவர் வீட்டில் சாப்பாடு, தேர்தல் குழுவுடன் ஆலோசனை

அதிமுக அணிகள் இணைகிற சூழலில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அதிமுக அணிகள் இணைகிற சூழலில், பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தமிழகத்தில் பா.ஜ.க.வை பலப்படுத்த கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக அந்தக் கட்சியின் மேலிடம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மேற்பார்வையில் தனி அணி அமைந்தது. அந்த அணியால் 18 சதவிகித வாக்குகளை பெற முடிந்ததே தவிர, கணிசமான இடங்களை வெல்ல முடியவில்லை. நாடு முழுவதும் மோடி அலை வீசியபோதும் தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுக.வை ஜெயிக்க வைத்தார், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தமிழக அரசியல் சூழல்கள் தலைகீழாக மாறியிருக்கின்றன. அ.தி.மு.க. மூன்று அல்லது 4 அணிகளாக சிதறியிருக்கிறது. அவற்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தை நிறைவுபெறும் நிலையில் இருக்கிறது.
பா.ஜ.க.வின் ஆசியுடனேயே இந்த இணைப்பு நடவடிக்கைகள் வேகம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. எனவே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி மலரும் வாய்ப்பு இருக்கிறது. அதிமுக.வுடன் அணி சேர்ந்தாலும் இனி பழைய மாதிரி 4 அல்லது 5 தொகுதிகளில் போட்டியிடும் கட்சியாக பா.ஜ.க. இருக்காது. இப்போதைய சூழலில் பா.ஜ.க. ஒதுக்கும் தொகுதிகளில் போட்டியிட அதிமுக தயாராகும் என்றே தெரிகிறது.

கணிசமான தொகுதிகளில் போட்டியிட வசதியாக, கட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் வேலையை பா.ஜ.க. மேலிடம் செய்ய இருக்கிறது. ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் முகாமிடும் அமித்ஷா இந்த கோணத்திலேயே கட்சியினரை முடுக்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

22-ந்தேதி காலை 10.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் அமித்ஷாவை தமிழக பா.ஜ.க. தலைவர்கள் வரவேற்கின்றனர். அதிமுக அணிகளின் தலைவர்களும் அங்கே ஆஜராகும் வாய்ப்பு இருக்கிறது. அங்கிருந்து காரில் புறப்படும் அமித்ஷா, கடற்கரை சாலையில் ரிசர்வ் வங்கி எதிரேயுள்ள துறைமுக விருந்தினர் மாளிகைக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.

அங்கு பா.ஜ.க. மாநில நிர்வாகிகளை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், பா.ஜ.க. செயல்பாடு குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

மாலை 4.30 மணிக்கு மயிலாப்பூர் சவேரா ஓட்டலுக்கு வரும் அமித்ஷா, பா.ஜ.க.வில் உள்ள பல்வேறு அணிகளின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இரவு துறைமுக விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

மறுநாள் (23-ந்தேதி) காலை 9 மணிக்கு நடுக்குப்பம் மீனவர்கள் வசிக்கும் பகுதிக்கு வரும் அமித்ஷா, சரவணமூர்த்தி என்ற மீனவர் வீட்டில் காலை உணவு சாப்பிடுகிறார். அவருக்காக, கடையில் எதுவும் உணவு வாங்கி வைக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் தயாரிக்கும் உணவையே அமித்ஷா சாப்பிட இருக்கிறார்.

அவருக்காக இட்லி, தோசை, குழிப்பணியாரம், மெதுவடை, சாம்பார், சட்னி, வடை குழம்பு, ரவா கேசரி, கேரட் அல்வா, பால்கோவா ஆகியவை வாழை இலையில் பரிமாறப்பட இருக்கிறது. வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுடன் அவர் தரையில் அமர்ந்து சாப்பிட இருக்கிறார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு விவேகானந்தர் இல்லத்திற்கு அமித்ஷா சென்று சுற்றிப்பார்க்கிறார். காலை 11 மணிக்கு கமலாலயம் வரும் அமித்ஷா, அங்கு அமைக்கப்பட்டுள்ள மீடியா சென்டரை திறந்துவைக்கிறார். தொடர்ந்து கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலுக்கு வரும் அவர், மதியம் 12.30 மணிக்கு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கிறார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து அங்கேயே மதிய உணவு சாப்பிடுகிறார்.

தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமித்ஷா, மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து கோவை புறப்பட்டு செல்கிறார். மாலை 6 மணியளவில் கோவையில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இரவு அங்குள்ள பொதுப் பணித்துறைக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் அமித்ஷா தங்குகிறார்.

24-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு அங்குள்ள ரேடிஷன் புளூ ஓட்டலுக்கு வரும் அமித்ஷா, பொதுத்தேர்தல் தொடர்பாக பா.ஜ.க.வில் அமைக்கப்பட்டுள்ள 27 கமிட்டி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கோவையில் இருந்து அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

3 நாட்களும் அமித்ஷா சுற்றுப்பயணத்தை எழுச்சியுடன் அமைத்துக்கொள்ளும் வகையில், மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் திரள்கிறார்கள்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close