துணை ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் சாமர்த்தியமாக தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது பா.ஜ.க.!
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடவேண்டும், பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பா.ஜ.க. இளைஞர் அணி சார்பில் கோட்டை நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்திருந்தனர். அதையொட்டி சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஆகஸ்ட் 7 (இன்று) காலை 10 மணிக்கு பா.ஜ.க. தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர்.
பா.ஜ.க. இளைஞரணி தேசிய தலைவரான பூனம் மகாஜன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து வந்திருந்தார். முன் தினம் அவர் நடிகர் ரஜினிகாந்தை சென்னையில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை, மேலிட பார்வையாளர் முரளிதரராவ், மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், இளைஞரணி மாநில தலைவர் வினோஜ் செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஹெச்.ராஜா பேசுகையில், ‘பா.ஜ.க. பிரதிநிதித்துவம் இல்லாத மாநிலமே இனி இருக்காது’ என்றார். தமிழிசை பேசுகையில், ‘தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியதே தி.மு.க.தான். அதற்கு ஸ்டாலின் என்ன பிராயசித்தம் செய்யப்போகிறார்? படி என்று சொல்லவேண்டிய இளைஞர்களிடம் குடி என்று பழக்கிவிட்டார்கள்.
ஒரு திராவிடக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு திராவிடக் கட்சி இருக்க முடியாது. காவிகள் ஆள முடியுமா? என கேட்கிறார்கள். பாவிகள்தான் ஆளக்கூடாது. காவிகள் ஆளலாம்!’ என பேசி முடித்தார் தமிழிசை.
பின்னர் இவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக கிளம்பினார்கள். சற்று தூரத்தில் போலீஸ் அவர்களை மறித்து தமிழிசை உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை கைது செய்தது. பிற்பகலில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தப் போராட்டத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ‘தூய்மை இந்தியா’ இயக்கத்தை முன்னெடுக்கும் பா.ஜ.க.வினர் அந்த ஏரியாவையே காலி வாட்டர் பாக்கெட்டுகளால் நிரப்பி போட்டுவிட்டு சென்றதை தவிர்த்திருக்கலாம்.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல்கள் முடிந்த பிறகு தமிழக அரசுக்கு எதிரான போராட்டத்தை வைத்துக்கொண்ட பா.ஜ.க.வின் சாமர்த்தியத்தை (?) பாராட்டியே ஆகவேண்டும்.